குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்

by Staff / 11-02-2023 01:35:00pm
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி. மு. க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தி. மு. க. தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் 39-வது வார்டுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது பொதுமக்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.முன்னதாக அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது கூறியதாவது: - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி. மு. க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றிபெற செய்யவேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்திற்கு தவறாமல் வாக்களிக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைகளுக்கு கீழ் அடகு வைத்து பெற்ற கடன்களை தள்ளுபடி செய்தவர் தமிழக முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலின். மேலும் அவர் அரசு பள்ளிக்கூடங்களில் படித்துவிட்டு உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1, 000 உதவித்தொகை, தொடக்க பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி, இல்லம்தேடி மருத்துவம் இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தேர்தலின்போது தி. மு. க. கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1, 000 வழங்கும் திட்டத்தை விரைவில் முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார். இவ்வாறு அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார். அப்போது அவருடன் திண்டுக்கல் மாவட்ட தி. மு. க. செயலாளர் ஐ. பி. செந்தில்குமார், 39-வது வார்டு செயலாளர் கே. டி. மகேஷ்வரன், கவுன்சிலர் கீதாஞ்சலி செந்தில்குமார், தி. மு. க. பிரமுகர் கேபிள் செந்தில்குமார் உள்பட பலர் இருந்தனர்.

 

Tags :

Share via