அகிலேஷ் யாதவுடன் ஆம் ஆத்மி மூத்த தலைவர் சந்திப்பு

by Editor / 04-07-2021 06:46:49pm
அகிலேஷ் யாதவுடன் ஆம் ஆத்மி மூத்த தலைவர் சந்திப்பு

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் சிங் சந்தித்துப் பேசினார். இதனால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய கூட்டணி அமையும் எனப் பேச்சு எழுந்துள்ளது.சமீபத்தில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான நிலபேர ஊழல் புகாரில் சமாஜ்வாதியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சியும் குற்றச்சாட்டை எழுப்பி இருந்தது. இதையடுத்து நேற்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை ஆம் ஆத்மி உத்தரப்பிரதேச பொறுப்பாளரான சஞ்சய் சிங் நேரில் சந்தித்தார்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இந்த சந்திப்பானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 3 முறை ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. வாக்குகள் சிதறாமல் இருக்க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியிலும் சமாஜ்வாதி இறங்கியுள்ளது.

இச்சூழலில், ஆம் ஆத்மி -சமாஜ்வாதி தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 2014 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் ஒதுங்கியிருந்த ஆம் ஆத்மி மீண்டும் உ.பி.யில் தீவிரம் காட்டுகிறது.

இதிலும் அக்கட்சிக்கு வெற்றி கிடைப்பது சிரமம் என்றாலும், கணிசமான வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆம் ஆத்மி கட்சிக்கும் கணிசமான தொகுதிகளை ஒதுக்கி சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி வலுவான கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

 

Tags :

Share via