உலக தாய்மொழி தினம்(தொகுப்பு)

by Editor / 21-02-2023 07:23:20am
உலக தாய்மொழி தினம்(தொகுப்பு)

இன்று உலகில் ஏறக்குறைய 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. . இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. ஆனால் தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர். உலகில் 94 நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர். பல நூற்றாண்டு கால தொன்மை  மரபுடையது நம் தமிழ்  மொழி, இந்த மரபு உலகத்தில் வெகு சில மொழிகளுக்கு மட்டும்தான் உண்டு.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியமான திருக்குறளை பள்ளியில் கற்றுத் தருகின்றனர். திருக்குறளில் உள்ள சொற்கள் பல, நம்முடைய இன்றைய வாழும் மொழியிலும் இருக்கின்றது. இந்த அளவிற்கு தொடர்ச்சியான மரபுடைய மொழிகள் உலகத்தில் இல்லவே இல்லை என்று சொல்லலாம், 

யுனெஸ்கோவின் அறிக்கையில், தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் உலகெங்கிலும் பெரும்பான்மையானவர்கள் தம் தாய்மொழி அல்லாத பிற மொழிகளில் கற்பிக்கப்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை  என ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்கிற கருதுகோளை யுனேஸ்கோ அறிவித்துள்ளது. இன்றைய தொழில்நுட்பத்தில் யுனிகோட்-டில் அனைத்து மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். பல மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு இன்றைய தொழில்நுட்பம் பெரும் பயனாக இருக்கிறது. அதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளிகளில் அடிப்படைக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்தும் தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும்.

இன்றைய டிஜிட்டல் உலகில் மொழிகளை இணைப்பதும் கற்றல் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் இன்றியமையாதது. தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட தொலைநிலைக் கல்விக் கற்றல் முறைகள் இணைக்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இன்றைக்கு உலகம் முழவதும் பேசப்படுகின்ற பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாச்சாரமும், அறிவு சார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன. ஆம் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களின் தாய் மொழியை அழித்தால் போதுமானது. இன்று நம் தமிழ் இனத்திற்கும் அத்தகைய ஆபத்து நெருங்குவதை உணர முடிகிறது. இன்று மக்களை எளிதில் சென்றடையக் கூடிய ஊடகங்கள், குறிப்பாக  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி பன்பலை நிகழ்ச்சிகள் கலப்பற்ற தூய்மையான மொழியில் இல்லை. பெரிதும் ஆங்கிலக் கலப்போடு தான் உள்ளது. அதனை அன்றாடம் பார்க்கும், கேட்கும் மக்களின் இயல்பான மொழியும் கலப்பட மொழியாகவே மாறிவிட்டது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தவர்கள் தத்தம் தாய்மொழியிலும், வட நாட்டவர் பெரும்பாலும் இந்தியிலும் பேசும் போது தமிழருக்கு மட்டும் தூய தமிழில் பேசுவது அவமானம், பிற்போக்குத் தனம் என்ற தாழ்வு மனப்பான்மை ஊட்டப்பட்டுள்ளது. நம் தாய்மொழியோடு ஆங்கிலத்தைக் கலந்து பேசினால் மட்டுமே நாம் அறிவாளிகள். அதிலும் இந்தியைக் கலந்து பேசினால் இன்னும் அறிவாளிகள் என்று கருதும் மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது.

பிறந்தது முதல் 5 வயது வரையிலும் வீட்டில் தாய் மொழியிலே பேசி, தான் பார்க்கும் பொருள்களை தாய் மொழியிலேயே கேட்டு வளரும் குழந்தை 5 வயதில் பள்ளிக்குச் சென்றவுடன், அனைத்தையும் ஆங்கிலத்தில் வேறொன்றாகக் கேட்டுத் திகைக்கிறது. ஒரு குழந்தை தன் தாய்மொழியில் கற்கும் போது தான் அதன் கற்கும் திறனும், அறிவு வளர்ச்சியும் அதிகரிக்கிறது. ஆங்கிலத்தில் கற்கும் போது தாய்மொழியில் சிந்தித்து மீண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து கற்பதால் அதுவே பெரிய சுமையாகிறது. தாய் மொழியில் அடிப்படை அறிவைப் பெற்ற பிறகு எப்போது வேண்டுமானாலும், எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கல்வியறிவினைப் பெறும் ஊடகமாகத் தாய் மொழி மட்டுமே இருக்க வேண்டும். இந்த  புரிதல் இல்லாமல் அன்றாடம் உழைத்து வாழும் சாமான்ய மக்கள் கூடத் தம் குழந்தைகளுக்குத்  தரமான கல்வியைக் கொடுக்கிறோம் என்று நம்பி தங்கள் தகுதிக்கு மீறி, அதிகப் பணம் செலுத்தி ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கு அனுப்புவது பெரும் அறியாமையே.

தாய்மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமல்ல, தாய்மை உணர்வோடு பயன்படுத்த வேண்டிய மொழியாகும். தாய்மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டிய பொறுப்பும் உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.கண்ணில்லாதவன் நிலைதான் மொழிதெரியாதவன் நிலை.. நன்றி.


 

உலக தாய்மொழி தினம்(தொகுப்பு)
 

Tags : உலக தாய்மொழி தினம்.

Share via