ஈ வி கே எஸ் என் மகன் விட்டு சென்ற பணியை தொடர்கிறேன்

by Staff / 03-03-2023 12:53:09pm
ஈ வி கே எஸ் என் மகன் விட்டு சென்ற பணியை தொடர்கிறேன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி மாநில முன்னாள் தலைவர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: - இந்த வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு தான் இந்த வெற்றியின் பெருமைகள் சேரும். அவரின் 20 மாத ஆட்சி காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதற்கு அங்கீகாரமாக தான் மக்கள் இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் ராகுல்காந்தி மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அன்புக்கும், பாசத்துக்கும், ஆதரவுக்கும் எடுத்துக்காட்டாக இந்த வெற்றியை பார்க்கிறேன். ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் மூலமாக அவர் மீது தமிழக மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது. என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை ஏற்கனவே மறைந்த எனது மகன் திருமகன் ஈவெரா, அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் மற்ற அமைச்சர்களும் பேசி உள்ளனர். அதன்படி அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து முதல்- அமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இருக்கிற சட்டப்பேரவையில் நானும் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் என்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும் அனுபவத்திலும், தியாகத்திலும், செயல் திறனிலும் பல மடங்கு உயர்ந்தவர். வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் தி. மு. க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

இந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு தி. மு. க. அமைச்சர்களின் உழைப்பு சாதாரணமானது கிடையாது. அவர்கள் போட்டியிடும் தேர்தலில் கூட இப்படி உழைத்து இருப்பார்களா? என்ற சந்தேகம் உள்ளது. அவ்வளவு கடுமையாக தினமும் காலையிலும், மாலையிலும் ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்தித்து இருக்கிறார்கள். அமைச்சர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் பிரசாரம் செய்தபோது மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு இருந்தார்கள். கனிமொழி எம். பி. பிரசாரத்துக்கும் அதிக அளவில் மக்கள் வந்திருந்தார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மக்கள் அந்நியராக நினைக்காமல், தங்களில் ஒருவராகவும், தங்கள் வீட்டு பிள்ளையாகவும் நினைக்கும் அளவுக்கு அவரது பிரசாரம் இருந்தது. முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மிக சிறப்பாக பேசினார். என் குடும்பத்தை பற்றி பேசும்போதெல்லாம் அவர் மீது எனக்கு இருந்த மரியாதை பன் மடங்கு உயர்ந்துள்ளது. கண்டிப்பாக அவரது பிரசாரம் முத்தாய்ப்புபோல அமைந்திருந்தது.இன்றைக்கு சில பேர் தேர்தல் ஆணையம் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை, மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அ. தி. மு. க. வேட்பாளர் கே. எஸ். தென்னரசு பேட்டி கொடுத்தபோது, தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டதாக அவரே கூறி உள்ளார். தேர்தல் ஆணையம் நாகரிகமாக, நாணயமாக, சட்டப்படி நடந்து கொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அனுமதியின்றி செயல்பட்ட தி. மு. க. , அ. தி. மு. க. தேர்தல் பணிமனைகள் மூடப்பட்டன. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டது. எனது மகன் விட்டு சென்ற பணியை நான் தொடர உள்ளேன். ஏற்கனவே என் மகன் இங்கு பல பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அதனை நான் முடிக்க வேண்டும். இவ்வாறு ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் கூறினார்.
 

 

Tags :

Share via