இபிஎஸ் மீது வழக்குப்பதிவு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் இறங்கி, பேருந்தில் பயணித்த போது அமமுகவை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேசி முகநூல் பக்கத்தில் நேரலை வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த நேரலை வீடியோ பதிவை எடுத்து கொண்டிருக்கும்போதே, இபிஎஸ்ஸின் பாதுகாவலர் போனை வாங்கி நேரலையை தடுத்துள்ளார். பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த ராஜேஸ்வரனை அதிமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து அமமுகவை சார்ந்த ராஜேஸ்வரன் மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் தனித்தனியாக மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அமமுகவை சேர்ந்த ராஜேஸ்வரன் அளித்த புகாரின்பேரில் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மணிகண்டன், எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் அரவிந்தன் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி, தாக்குதல், செல்போன் பறிப்பு, காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வை சண்முகம் சாலையில், 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த போது, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருந்தும் சாலையில் அமர்ந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜெயவர்தன், மு.க.ஸ்டாலின் என்ற சர்வாதிகாரிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வழங்கலாம். மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை ஒழுங்காக செய்வதை விட்டு விட்டு, ஒழுங்காக ஆட்சியை நடத்துவதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சியின் குரல்வளையை நசுக்க பார்க்கிறார் என்று விமர்சித்தார்.
இதேபோல் மதுரையிலும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏக்கள் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது திமுகவுக்கு எதிராகவும், வழக்குபதிவு செய்த காவல்துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.இதுதவிர, எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி விழுப்புரம் காந்தி சிலை முன்பு அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாருக்கு எதிராக கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.மேலும் கள்ளக்குறிச்சியிலும் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக் கோரியும், வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில், வழக்குப்பதிவு செய்த காவல்துறைக்கு எதிராகவும், திமுக அரசிற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Tags :



















