கஞ்சா விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த நபர் கைது.

by Staff / 14-03-2023 01:14:40pm
கஞ்சா விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த நபர் கைது.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வரும் சூழலில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை.இதனால் காவல் ஆணையர் தனிப்படை போலீசார் கொண்டு வாகன சோதனைகளை ஈடுபடுத்தி கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார்.அதனடிப்படையில் தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் கடச்சனேந்தல்-ஊமச்சிக்குளம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்ட போது 72 கிலோ கஞ்சா கடத்துவது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த அய்யர்பங்களா ஜி. ஆர். நகரை சேர்ந்த பரமேஸ்வரன் (42) என்பவரை போலீசார் கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பரமேஸ்வரன் தொடக்க காலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது போதுமான வருவாய் கிடைக்கவில்லை என்பதால் குடும்பத்தை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என பரமேஸ்வரன் முடிவு செய்தவர் தவறான வழியை தேர்ந்தெடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து சட்ட விரோதமாக கஞ்சாவை கடத்தி வந்து மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்று வந்துள்ளார். இந்த தொழிலுக்கு அவரது மனைவி விஜயலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கஞ்சா விற்பனையில் பரமேஸ்வரனுக்கு கணிசமான லாபம் கிடைத்ததால் ஆந்திராவிலிருந்து கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி சமூக விரோதிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு சப்ளை செய்தார். இதில் அவருக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது.இதன் மூலம் ஆடம்பர பங்களா, 5 கார்கள், 14 செல்போன்கள், தங்கச்சங்கிலி உள்ளிட்ட பல சொத்துக்களை வாங்கி குவித்தார். ஏற்கனவே கஞ்சா கடத்தல் தொடர்பான வழக்குகள் பரமேஸ்வரன் மீது செல்லூர் காவல் நிலையத்தில் உள்ளது.தற்போது. பரமேஸ்வரனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது மனைவி விஜயலட்சுமியை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via