அமெரிக்காவிலிருந்து திரும்பினார் நடிகர் ரஜினி

by Editor / 09-07-2021 11:48:41am
அமெரிக்காவிலிருந்து திரும்பினார் நடிகர் ரஜினி

கடந்த 19-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் பேரன்களும் சென்றனர். மூன்று வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை முடித்த நிலையில் அவர் இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார்.

முதன்முதலில், கடந்த 2011ம் ஆண்டு தான் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சற்று கவலைதரும் வகையில் பாதிக்கப்பட்டது. அப்போது அவர் சென்னை போரூர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு அவருக்கு உறுதியானது. சிலகாலம் அங்கேயே தங்கியிருந்தார். ஆனால், மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் அங்கிருந்து சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவ மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இது ஆசியாவின் மிகச் சிறந்த மருத்துமனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து அம்மருத்துவமனை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதால் பல்வேறு வதந்திகளும் பரவின. இதனால், மருத்துவச் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு ரஜினி பேசி பதிவு செய்த சிறிய உரையை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணையத்தில் வெளியிட்டார்.

சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின் இயல்பாகவே இருந்துவந்த அவருக்கு மீண்டும் 2016ல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அவருக்கு அவரது இளைய மகள் செளந்தர்யா சிறுநீரகம் தானமாகக் கொடுத்ததாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் இருக்கின்றன.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்றால் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து பெரிதும் முடக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளச் செல்லவில்லை.

இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரஜினிகாந்த் கடந்த 19-ஆம் தேதி அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு அவர் பிரபல மாயோ கிளினிக்கில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். சோதனைகளை முடித்துக் கொண்டு இன்று அவர் ஊர் திரும்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories