மேகதாது அணை பிரச்னை முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  12-ம்  தேதி அனைத்து கட்சி கூட்டம்

by Editor / 09-07-2021 04:08:37pm
மேகதாது அணை பிரச்னை முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  12-ம்  தேதி அனைத்து கட்சி கூட்டம்



மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின்  12 ந் தேதி (திங்கட்கிழமை) அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சியினருக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரும், பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும், அண்மையில் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து, இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரது தலைமையில், வருகிற 12-.7.-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 10-.30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார் என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo