மாஞ்சோலை பகுதி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘‘மாஞ்சோலை மறுவாழ்வு விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தொழிலாளர்கள் கேட்ட கோரிக்கைகளை விட அதிகமாகவே அரசு நிவாரணம் வழங்கி வருகிறது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘மாஞ்சோலை விவகாரம் என்பது சுற்றுச்சூழல் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டதாகும். மேலும் அது பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் எங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். அதனால் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மாஞ்சோலை பகுதி தொடர்பான வழக்கை வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கிறோம். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன விதமான நடவடிக்கை எடுக்க போகிறது. அது எந்த மாதிரியானது என்பது குறித்து எங்களுக்கு தெளிவாக விவரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Tags :