ஆக்சிஜன் தேவை, விநியோகம் தொடர்பாக  உற்பத்தி நிறுவனங்களுடன் மோடி ஆலோசனை

by Editor / 09-07-2021 04:05:52pm
ஆக்சிஜன் தேவை, விநியோகம் தொடர்பாக  உற்பத்தி நிறுவனங்களுடன் மோடி ஆலோசனை



நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி, தேவை, விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
கொரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், தடுப்பூசி செலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதுமட்டுமின்றி உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் கொரோனா 3-வது அலை தொடர்பாக பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.

கடந்த ஏப்ரல்- மே மாதங்களில் கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்தபோது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் 3-வது அலை ஏற்பட்டால் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் முதல்முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.23 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதில் 736 மாவட்டங்களில் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகள் உருவாக்கப்படும், நாடு முழுவதும் 2.40 லட்சம் படுக்கைகள் அமைக்கப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கிடங்கு கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி, தேவை, விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலங்கள் வாரியாக தேவை, விநியோகம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

 

Tags :

Share via