10 ஆண்டு காத்திருந்து பழிக்குப்பழி
பழைய வண்ணாரப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் குமார், 52. ரவுடியாக வலம் வந்த இவர் மீது, கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது குமார் திருந்தி வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் குமார் தன் வீட்டருகே நடந்து வந்தபோது, அவ்வழியே பைக்கில் வந்த ஆறு பேர் கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவர்களிடமிருந்து குமார் தப்பி ஓட முயன்றபோது, அந்த கும்பல் தலையில் அவரை வெட்டி தப்பியது. படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு குமார் உயிரிழந்தார். இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தஆகாஷ், 23, லாரன்ஸ், 27, பூபதி, 29, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாபு, 24, புளியந்தோப்பைச் சேர்ந்த பார்த்திபன், 26, முரளி, 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் 2013ல், வண்ணாரப்பேட்டையை கலக்கி வந்த ரவுடி வெங்கட்டா படுகொலை செய்யப்பட்டார். தற்போது கொலை செய்யப்பட்ட குமார், கொலைக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்தது தெரியவந்தது. இதனால் தந்தையை கொலை செய்த குமாரை பழிவாங்க, வெங்கட்டாவின் மகன் ஆகாஷ், தன் கூட்டாளிகளோடு சேர்ந்து குமாரை படுகொலை செய்தது தெரியவந்து உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன், தந்தையின் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியவரை, 10 ஆண்டுகள் காத்திருந்து மகன் கொலை செய்த சம்பவம், வண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சாவு வீட்டில் தகராறுபழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கமலக்கண்ணன், 35. இவர், நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட ரவுடி குமாரின் உறவினர் ஆவார். இவர், நேற்று முன்தினம் இரவு துக்கம் விசாரிப்பதற்காக சாவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜசேகர், 42, என்பவருடன் சேர்ந்து மது அருந்தும்போது, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜசேகர், குடிபோதையில் இருந்த கமலக்கண்ணனின் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்றார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கமலக்கண்ணனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட ராஜசேகரை நேற்று கைது செய்தனர்.
Tags :