எம்ஜிஆர் மறைவின் போது உதவிய ரஜினி -சசிகலா தகவல்

by Editor / 18-07-2021 11:48:36am
எம்ஜிஆர் மறைவின் போது உதவிய ரஜினி -சசிகலா தகவல்


எம்ஜிஆர் மறைவின் போது அவரது உடலை பார்க்க சென்ற போது ஜெயலலிதாவையும் என்னையும் சிலர் அனுமதிக்காத போது அங்கிருந்த ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்காக குரல் கொடுத்தார் என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா தந்தி டிவிக்கு அவர் வெளியிட்ட சிறப்பு பேட்டியில் கூறுகையில், எம்ஜிஆர் மறைந்த போது ஜெயலலிதாவுக்கு அப்போதைய அமைச்சர்கள் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு பிடிஐயிலிருந்து தகவல் கிடைத்தது.
நான்தான் ஜெயலலிதாவுக்கு போன் செய்தேன். போனில் ஜெயலலிதாவிடம் எம்ஜிஆரின் இறப்பு செய்தியை கூறினேன். அப்படியா என கேட்டவர்தான் அவரிடம் இருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.
பின்னர் நான் போனை வைத்துவிட்டு தினகரனை அழைத்து கொண்டு போயஸ் தோட்டம் சென்றோம். அங்கு நானும் ஜெயலலிதாவும் காரில் பின்னால் உட்கார்ந்து கொண்டோம். நேராக ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டுக்கு சென்றோம். அங்கு வீட்டின் கேட் மூடப்பட்டிருந்தது.
நாங்கள் ஹார்ன் அடித்தோம். யாரும் திறக்கவில்லை. எங்களை உள்ளேவிடக் கூடாது என்பதில் சிலர் குறியாக இருந்தனர். பின்னர் தினகரன் கேட்டை திறக்காவிட்டால் உடைத்து கொண்டு செல்லலாம் என்றார். உடனே நானும் ஜெயலலிதாவும் அதற்கு தயாராகிவிட்டோம்.
 
உடைக்கும் போது இரும்பு துகள்கள் எங்கள் மீது படாமலிருக்க காரின் கண்ணாடிகளை ஏற்றுமாறு தினகரன் கூறினார். இதையடுத்து எப்படியோ கேட்டை திறந்துவிட்டார்கள். நாங்கள் உள்ளே சென்றோம். அப்போது போர்டிகோவிலேயே தடுத்து நிறுத்தினர்.
நாங்கள் எவ்வளவோ கேட்டும் எங்களை விடவில்லை. உடனே அங்கிருந்து ஒரு குரல், "அந்தம்மாவை விடுங்கள்" என கேட்டது. யாரென்று திரும்பி பார்த்தால் ரஜினிகாந்த். எம்ஜிஆர் இறப்புக்கு அவரும் வந்திருந்தார். அந்த நேரத்தில் எங்களுக்காக ரஜினி குரல் கொடுத்தது இன்றும் நினைத்து பார்க்கிறேன்.
 
பின்னர் உள்ளே சென்றோம். ஒரு அறையில் பெண்கள் கூட்டம் இருந்தது. இன்னொரு அறைக்கு சென்றோம். அங்கே எங்கள் மூவரையும் வைத்து பூட்ட சிலர் நினைத்தனர். நல்ல வேளையாக தினகரன் கதவுகளுக்கு மத்தியில் இருந்ததால் எங்களை பூட்ட முடியவில்லை என்றார்.

 

Tags :

Share via