பிளஸ் 1 தமிழ் பாடத்தில் இளையராஜா

by Writer / 23-09-2021 04:35:11pm
பிளஸ் 1 தமிழ் பாடத்தில் இளையராஜா

 


இளையராஜா பற்றி ப்ளஸ் 1 தமிழ் பாடப்புத்தகத்தில் பாடம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சிம்பொனித் தமிழர் என்கிற தலைப்பில் இடம் பெற்றுள்ள அந்த பாடத்தில், இசைஞானி இளையராஜாவின் இசை குறித்தும், அவரது பயணம் குறித்தும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவற் பெற்ற விருதுகளும் அதில் இடம் பெற்றுள்ளன. அந்த பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தகவல்
இசை! கலைகளின் மகுடம்! உணர்வுகளின் வினையூக்கி. இசை, குருதியைச் சூடேற்றும்; உயிரை உருக்கும்; ஆழ்கடல் அமைதியாய் மனத்தை உறங்க வைக்கும். இரசனையின் முகவரிக்கு இசைமொழியில் கடிதமெழுதும் காற்றின் கவிஞர்களே இசைக்கலைஞர்கள். தமிழகத்தின் காட்டிலும் மேட்டிலும் வயல் சேற்றிலும் தவழ்ந்த இசையைச் சீராட்டி, மெருகூட்டி உலகுக்குத் தந்து மகிழ்ந்தவர் இருவர். இவ்விருவரும் உலக இசைப்பேரேட்டின் தமிழகத்து முத்திரைகள்; அவர்கள், சிம்பொனித் தமிழர் இளையராஜா, ஆஸ்கர் தமிழர் ஏ.ஆர் இரஹ்மான் ஆகியோர் ஆவர்.


ஆசியக் கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கோவையை உருவாக்கும் திறன் கைவராது என்பது மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டமாகும். இந்தக் கற்பனாவாதத்தை உடைத்து ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவுக்கு, சிம்பொனி இசைக்கோலத்தை அமைத்துக்காட்டியவர் மாஸ்ட்ரோ இளையராஜா. அவர், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தைச் சேர்ந்தவர். அவருடைய இயற்பெயர் இராசையா. தாய் பாடும் தாலாட்டில் தொடங்கித் தமிழ்நாட்டின் அனைத்து இசை வடிவங்களையும் அசைபோட்டு வளர்ந்த தமிழினத்தின் பெருமைக்குரிய இசை மேதை அவர் என்று அவரை பற்றி எழுதப்பட்டுள்ளது.

அன்னக்கிளி படத்தில் சை அமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவின் இசையோட்டம் தமிழர் வாழ்ந்த திசைகளில் எல்லாம் தென்றலாய் நுழைந்து புதிய வாசல்களைத் திறந்தது. அவரிடமிருந்து புதுப்புது மெட்டுகள் சிறகு விரித்தன. கண்களை மூடிக்கொண்டு இளையராஜாவின் பாடல்களைக் கேட்டால், பாடலின் ஒவ்வொரு சரணத்திற்கு இடையிலும் அவர் சுழற்றும் இசைச் சிலம்பம் நம்மைப் புதிய திசைகளில் பறக்க வைக்கும். அவர். பழந்தமிழ் இசையையும் உழைக்கும் மக்களின் துள்ளல் இசையையும் மனத்தை மயக்கும் வகையில் கலந்து தந்தார். இவர், திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர்: பல இராகங்களுக்குத் திரையிசையில் கொடுத்த அறிமுக மெட்டுகள் மெல்லிசையில் புதிய உயரங்களைத் தொட்டன.

1970களின் தொடக்கத்தில் பிறமொழிப் பாடல்களைச் சுமந்து திரிந்த தமிழ்ச்செவிகள் விடுதலை பெற்று, தமிழ்ப்பாடல்களை நோக்கித் திரும்பியதற்கு இளையராஜாவே காரணமெனலாம். எழுபது, எண்பதுகளில் மெல்லத் தோன்றிப் புது வேகம்கொண்ட சமூக மாற்றங்களின் குறியீடாக இளையராஜாவின் இசை திகழ்ந்தது. பின்னணி இசையிலும் பாடல் இசையிலும் விடுபட்டுப்போன வாய்மொழித் தன்மை, யதார்த்தம் ஆகியன பொதிந்த அவருடைய இசை,சாமானியரையும் ஈர்த்தது; அவர்களது வாழ்வின் தருணங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதோடு அமைப்புக்கு அப்பாற்பட்ட இசை இயக்கமாகவும் மாறியது. அவர், தமிழ்ச் செய்யுளின் யாப்போசைக் கட்டமைப்புக்குள் இருக்கின்ற இசை ஒழுங்கைப் புரிந்துகொண்டு திரைப்பாடல்களைச் செவியுணர் கனிகளாகவும் பண்பாட்டு வெளிப்பாடாகவும் மாற்றிய பெருமைக்குரியவர்.

அவருடைய இசை ஐவகை நிலப்பரப்புகளையும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக் கொண்டது. இன்றளவும் நெடுந்தொலைவுப் பயணங்களின் வழித்துணையாக அவரது இசை இருப்பதற்கு இதுவுமொரு காரணம். வற்றாத நதிகள் பாயும் மலைகள் நிறைந்த ஜம்மு, காஷ்மீரின் பஹார் இன மக்களின் நாட்டுப்புற இசையில் புல்லாங்குழலில் வழிந்தோடும் பஹாடி முதல் மதுரை மக்களின் கிராமிய இசையிலிருந்து முகிழ்த்துச் செவ்வியல் இசையில் கோலோச்சும் ஆனந்தபைரவி (அன்னக்கிளி உன்னைத் தேடுதே) வரை அவரது

இசையில் பண்கள் இழையோடுகின்றன. எம்மொழியில் இசையமைத்தாலும், அவர் அம்மண் மணத்துடன் தம்மை இணைத்து இசையமைப்பதே, மக்கள் அவருடைய இசையில் ஒன்றுவதற்குக் காரணமாகும்.

இந்திய இசைமேதைகள் அனைவராலும் மதிக்கப்படுபவர் இளையராஜா. அவரின், 'எப்படிப் பெயரிடுவேன்?' (HOW TO NAME IT) என்னும் இசைத்தொகுப்பும் புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்ட காற்றைத் தவிர ஏதுமில்லை' (NOTHING BUT WIND) என்னும் இசைத்தொகுப்பும் இசையுலகின் புதிய முயற்சிகள் எனக் கொண்டாடப்பட்டன. மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி போன்ற மனித உணர்வுகளுக்கும் இசை வடிவம் கொடுக்க முடியும் என்பதை "இந்தியா 24 மணிநேரம் (INDIA 24 HOURS)" என்னும் ஆவணக் குறும்படத்தின் பின்னணி இசையில் வெளிப்படுத்தினார்.


 
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ஆரட்டோரியோ (Or atorio) என்னும் இசை வடிவில் இசையமைத்துள்ளார். இராஜாவின் ரமணமாலை', 'இளையராஜாவின் கீதாஞ்சலி' என்னும் தமிழ் இசைத்தொகுப்புகளையும் கன்னட மொழியில் 'மூகாம்பிகை என்ற பக்தி இசைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் ஆதிசங்கரர் எழுதிய மீனாட்சி ஸ்தோத்திரம் என்ற பக்திப்பாடலுக்கும் இசையமைத்துள்ளார். பஞ்சமுகி என்ற கர்நாடகச் செவ்வியல் இராகம் அவர் உருவாக்கியதாகும்.


தமிழகத்தின் நாட்டுப்புற இசை வடிவத்தைத் திரையிசையில் தவழவிட்டவராகவே இசைஞானி இளையராஜா அறியப்படுகிறார். ஆனால், மேற்கத்திய இசையை முறைப்படி பயின்ற காரணத்தால் நாட்டுப்புற இசையின் செவ்வியல் தன்மைகளோடு மேற்கத்திய இசையைக் கலந்து உலவவிட்டார். கவிஞர், மனத்தில் உருவகித்துக் காகிதத்தில் எழுதுவதுபோல், மனத்தின் இசையைக் குறியீடுகளாகக் காகிதத்தில் எழுதிவிடுவார்! இசைஞானி தமது தேடலின்மூலம் மேற்கத்திய இசையுடன் கர்நாடக, இந்துஸ்தானி இராகங்களையும் திரையிசையில் பயன்படுத்தியிருக்கிறார்.


நாட்டுப்புறப் பாடலுக்குக் கர்நாடக இசை வடிவமும் கல்யாணி இராகத்தின் ஆரோகண சுரங்களைக்கொண்டே (ஏறுவரிசைச் சுரங்கள்) 'கலைவாணியே உனைத்தானே' என்னும் பாடலுக்கு மெட்டமைத்திருக்கிறார். மூன்றே மூன்று சுரங்களைக்கொண்டு ஒரு தெலுங்குப் பாடலுக்கு இசையமைத்தும் இருக்கிறார்; நான்கே இசைக்கருவிகளைக்கொண்டு ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். முழுத் திரைப்படத்துக்கும் அரை நாளில் பின்னணி இசையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார் (நூறாவது நாள்).

பிற நாட்டின் இசைவடிவத்தை நம் மண்ணுக்கேற்ற வகையில் மாற்றம் செய்வதோடு திரைப்படப் பின்னணி இசை கோர்வையை கூட, உணர்வின் மொழியாக மாற்றித் தருவது அவருடைய சிறப்பாகும். தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி என பிற மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இளையராஜா இசை கலைஞர் மட்டுமல்ல சிறந்த ஒளிபடக்கலைஞர், கவிஞர், பாடகர், 'பால்நிலா பார்வை, வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்கும்' போன்ற நூல்களை எழுதிய எழுத்தாளரும் ஆவார்.

 

Tags :

Share via