50 ரூபாய்க்கு உறவினருக்கு கத்திக்குத்து - ஒருவர் கைது.
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாச்சாமி (65). இவருக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 4 பேரும் திருமணம் முடித்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். அய்யாசாமியின் மூத்த மகன் மணிகண்டன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வசித்து வருகிறார். அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அய்யாச்சாமி பார்க்க கோவை வந்துள்ளார். அப்போது மணிகண்டன் சுண்டக்காமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, ராமசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுதர்சன்(50) என்பவர் மணிகண்டனிடம் 50 ரூபாய் பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் மணிகண்டன் பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமாதானம் செய்து இருவரும் பிரிந்து சென்றனர். இந்நிலையில் மீண்டும் சுதர்சன் தனது நண்பரான ராஜேந்திரன் என்கிற மாரிசாமி (48). என்பவருடன் அய்யாசாமியின் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு கொடுக்காததை கூறி வெளியே வரச்சொல்லி தகாத வார்த்தையில் சத்தம் போட்டுள்ளார். அப்போது வெளியே வந்த அய்யாசாமியிடம் சுதர்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவருடன் வந்த ராஜேந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அய்யாச்சாமி குத்தியுள்ளார். இதைப்பார்த்த மணிகண்டன் ஓடிவந்து தடுத்தபோது அவருக்கும் கத்தி குத்தியதில் காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த இருவரும் சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அய்யாச்சாமி கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரன் என்கிற மாரிசாமி (48) மற்றும் சுதர்சன் (50) இருவர் மீதும் பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுதர்சனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வெறும் ஐம்பது ரூபாய் கொடுக்க மறுத்ததால் உறவினரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags : Screaming relative - One arrested.