தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும்   முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

by Editor / 26-05-2021 04:05:43pm
 தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும்   முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 



தமிழகத்தில் தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐநாக்ஸ் ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலையில் முதல்வர் ஸ்டாலின்ஆய்வு மேற்கொண்டார் . தொடர்ந்து, பூந்தமல்லி அருகே நேமம் பகுதியில் வட்டார ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் தா.மோ அன்பரசன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “அனைவருக்கும் தடுப்பூசி போடத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் தொற்றைத் தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காகத் தான் ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது.
இதற்கான பயன் கடந்த இரு நாட்களாகத் தெரிகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழு பயனைத் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற ஏராளமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆக்சிஜன், படுக்கை வசதிகள் தேவையான அளவு இருக்கிறது.
கொரோனாவை தடுக்க தடுப்பூசி மிக முக்கியம். கடந்த ஜனவரி 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதில் இதுவரை இல்லாதவாறு, 2,24,544 தடுப்பூசி நேற்று போடப்பட்டிருக்கிறது. கடந்த மே 7ஆம் தேதி வரை சராசரியாகத் தினசரி 60 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல், ஒரு நாளைக்கு 78,000 தடுப்பூசிகள் போடப்படுகிறது.6 சதவிகிதமாக இருந்த தடுப்பூசி வீணடிப்பு ஒரு சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. தினசரி கொரோனா பரிசோதனை சராசரியாக 1.64 லட்சமாக உள்ளது., மேற்கு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கோவையில் பரவலைத் தடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் .
முதலில் ஒருவார காலம் மட்டும் ஊரடங்கை நீட்டிப்போம் என சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்தோம். தேவைப்பட்டால் அடுத்தது நீட்டிக்கலாம் என்றும் ஆலோசித்தோம். இப்போதைய நிலை ஓரளவுக்குத் திருப்தியாக இருக்கிறது. ஆனால் முழு திருப்தி வரவில்லை. எனவே ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் தமிழகத்தில் குறையவில்லை. இதனால், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படத்தான் வாய்ப்பிருக்கிறது. எனினும் கடுமையான ஊரடங்காக அல்லாமல், முந்தைய ஊரடங்கு போலக் காலை 10 மணி வரை கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுடன் நீட்டிக்கப்படலாம்” என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via