ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73% சொத்து சேர்ப்பு

by Editor / 03-09-2021 09:39:03pm
ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73% சொத்து சேர்ப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2011 முதல் 2013-ம் ஆண்டு வரை ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக ராஜேந்திர பாலாஜி, 7 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் மாதம் இருவேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டது. இந்த மாறுபட்ட தீர்ப்பால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் கடந்த ஜூன் மாத இறுதியில், நியமிக்கப்பட்டார். ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே ராஜேந்திரபாலாஜி தரப்பில் வாதம் முடிவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தனது வாதத்தை முன்வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.வழக்கை கைவிடுவதை பொறுத்தவரை முழுமையான நீதிமன்ற விசாரணைக்கு பிறகே முடிவு செய்ய முடியும். ஆரம்பகட்ட விசாரணையை வைத்து முடிவெடுக்க முடியாது. எனவே, தற்போது மேல் விசாரணை தொடங்கியுள்ளது. இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட, மேல் விசாரணை நடத்தலாம் என உயர்நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார். இதற்கு எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதி நிர்மல்குமார், விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Tags :

Share via

More stories