சுவாமி படத்திற்கு செருப்பு வைத்த கடைக்காரர் மீது, போலீசார் வழக்கு

by Editor / 03-09-2021 09:36:41pm
சுவாமி படத்திற்கு செருப்பு வைத்த கடைக்காரர் மீது, போலீசார் வழக்கு

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் வெளியில், ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்தோர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, கோவில் அருகில் சுவாமி அர்ச்சனைக்காக தேங்காய் கடை வைத்திருக்கும் பூபதி, 55, என்பவர், கடை வெளியில் ஒரு கட்டையில் செருப்பு மாட்டி, அதில் காஞ்சி அத்தி வரதர் புகைப்படத்தை வைத்திருந்தார். இதைப் பார்த்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைக்காரரிடம், 'செருப்பில் சுவாமி படத்தை ஏன் வைத்துள்ளீர்கள்' எனக் கேட்டனர். அதற்கு அவர், 'என் கடை. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் தி.க.,காரன்' எனக் கூறியுள்ளார்.

இரு தரப்புக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கடையை அடித்து நொறுக்கினர்.பாதுகாப்பிற்கு வந்த போலீசார், சண்டையை தடுத்து நிறுத்தி, கடை உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து ஹிந்து முன்னணியினர் கூறியதாவது: விநாயகர் கோவில் அருகில் தேங்காய் கடை வியாபாரம் செய்து வரும் இடம் நகராட்சிக்கு சொந்தமானது. அந்த இடத்தை ஆக்கிரமித்து, அவர் கடை வைத்துள்ளார். அவரது செயல், ஹிந்து மக்கள் அனைவரையும் புண்பட செய்துள்ளது. அந்த கடையை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சியிடம் புகார் மனு கொடுத்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Tags :

Share via