ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் தமிழக அரசு அறிவிப்பு
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் போராட்டத்தில் பங்கேற்ற பலரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.
இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பதிவான வழக்குகளில் தேவையற்ற வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வசம் உள்ள வழக்குகள், பொது, தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பதிவான வழக்குகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஆகிய சில வழக்குகள் தவிர மற்றவை வாபஸ் பெறப்படும் என கூறியது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய பரிந்துரைப்படி, வைகோ, நல்லகண்ணு, பாலகிருஷ்ணன், தினகரன் மற்றும் பிரேமலதா உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















