பாஜகவின் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர்

by Staff / 13-09-2023 01:56:37pm
பாஜகவின் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர்

எந்த ஒரு பிரச்சினையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பாஜகவினர் வல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். பாஜகவின் ஊழல், மதவாத, எதேச்சாதிகார முகத்தை அம்பலப்படுத்தி, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெல்ல அர்ப்பணிப்போடு செயல்படுவோம். எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது என்று திமுகவினருக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக திமுகவினர் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஒரு முக்கியமான கருத்தை நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். 'பாஜகவின் ஊழல்களைப் பற்றித்தான் நாம் அதிகம் பேச வேண்டும். அதைப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் சனாதனத்தைப் பற்றி அந்தக் கட்சி பேசித் திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறது" என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ள கருத்து மிக மிகச் சரியானது. அதனையே திமுகவினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

Tags :

Share via