ரயில் நிலையங்களில் தன்னார்வ தூய்மை பணி 73 இடங்களில் 166 நிகழ்ச்சிகள்

by Editor / 01-10-2023 08:50:02pm
ரயில் நிலையங்களில் தன்னார்வ தூய்மை பணி 73 இடங்களில் 166 நிகழ்ச்சிகள்

மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் செப்டம்பர் 16 முதல் அக்டோபர்  2  வரை தூய்மை விழிப்புணர்வு இரு வார விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 1 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள், ரயில்வே குடியிருப்புகள், ரயில்வே மருத்துவமனை, ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனைகள் ஆகியவற்றில் முழுமையான தன்னார்வ தூய்மை பணிகள் நடைபெற்றன. இந்த தூய்மைப் பணிகளில் ரயில்வே அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர், தேசிய மாணவர் படை, தேசிய சமுகப் பணி மாணவர்கள், பயணிகள் நலச் சங்க பிரதிநிதிகள், பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், ரயில் ரசிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மதுரை கோட்டத்தில் 49 ரயில் நிலையங்கள் உட்பட 73 இடங்களில் 166 தூய்மை பணி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரயில் நிலைய நடைமேடைகள், ரயில் நிலைய வளாகங்கள், ரயில் நிலைய அணுகு சாலைகள் ஆகியவற்றில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குப்பைகள், களைச் செடிகள், புதர்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தனர். 
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் திரு பி.அனந்த் அவர்கள் தலைமையில் மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்திலும்  , கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் திரு  சி.செல்வம் அவர்கள் மதுரை ரயில் நிலையத்திலும் முழுமையான சுத்தம் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, மானாமதுரை, இராமநாதபுரம், பழனி, உடுமலைப்பேட்டை மற்றும் தேனி ரயில் நிலையங்களில் இந்த முழுமையான தன்னார்வ தூய்மை பணிகள் நடைபெற்றது

ரயில் நிலையங்களில் தன்னார்வ தூய்மை பணி 73 இடங்களில் 166 நிகழ்ச்சிகள்
 

Tags : தூய்மை பணி 73 இடங்களில் 166 நிகழ்ச்சிகள்

Share via