திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

by Staff / 19-10-2023 02:16:22pm
திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

அரசு எந்திரத்தை கட்சி நிகழ்ச்சிகளுக்கு முறைகேடாக பயன்படுத்துவதை அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாக, தமிழக அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட அரசு சார்ந்த அதிகாரப் பூர்வ அறிவிப்புகள், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வழியாக வெளியாகும். இதற்கான அறிவிப்புகளில், அறிவிப்பு எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அரசு தொடர்பான அறிவிப்புகளை மட்டுமே, செய்தி மக்கள் தொடர்புத்துறை வாயிலாக வெளியிடுவது ஒவ்வொரு மாநில அரசும் பின்பற்றும் நடைமுறை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அரசு இயந்திரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்வது, செய்தி மக்கள் தொடர்புத் துறையிலும் தொடர்கிறது. திமுகவின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகள், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் வாயிலாக வெளியாகின்றன. கட்சி அறிவிப்புகளுக்கும், தமிழக அரசு அறிவிப்புகளுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு முறைகேடான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது அரசு. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும், அரசு ஊழியர்களை, திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கட்டாயப்படுத்துவதையும், அரசு எந்திரத்தை கட்சி நிகழ்ச்சிகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்துவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via