பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர் :  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

by Editor / 23-05-2021 04:23:27pm
பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர் :  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!



பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர் :  திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தி.மு.கழக ஆட்சி அமைவதற்கு அயராது பணியாற்றிய உடன்பிறப்புகளாம் உங்களை நேரில் காணும் மகிழ்ச்சியான வாய்ப்பு இன்னும் அமையவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. உங்கள் உழைப்பாலும் மக்களின் ஆதரவுடனும் முதலமைச்சர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் என் முன்னே சவாலான பெரும்பணி இருக்கிறது என்பதை நீங்களும் அறிவீர்கள். 
திருச்சியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பிறகு ஊடகத்தினருடனான சந்திப்பின்போது, “பொறுப்பேற்ற நாளைவிட, கொரோனாவைக் கட்டுப்படுத்திவிடடோம் என்ற செய்தி வரும் நாள்தான் எனக்கு மகிழ்ச்சியான நாள்” என்று தெரிவித்தேன். நம் அயராத உழைப்புக்கான உண்மையான வெற்றி நாளும் அதுதான்.
 
கொரோனா இரண்டாவது அலையின் கொடுந்தாக்குதலில் இருந்து தமிழகத்தைக் காக்கின்ற பணியை அனைத்துத் தரப்பினரையும் இணைத்து மக்கள் இயக்கமாக மேற்கொண்டிருக்கிறது நமது அரசு. நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திடவும், உயிரிழப்புகள் இல்லாத நிலையை உருவாக்கிடவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் வெற்றிபெறுவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியத் தேவை என்பதால் மே 24 (திங்கள்) முதல், ஒருவார காலத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது என மருத்துவ நிபுணர்களுடனும் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசித்து முடிவெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.முழு ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளைக் கவனத்தில் கொண்டு, ஞாயிறன்று அத்தியாவசியமான அனைத்துக் கடைகளையும் திறந்திடவும், போக்குவரத்து இயங்கிடவும் அனுமதி வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி, ஊரடங்கு காலத்தில் காய்கறிகள் – பழங்கள் ஆகியவை தடையின்றிக் கிடைக்கும் வகையில் தள்ளுவண்டியில் விற்பனை செய்திட ஏற்பாடு செய்யப்பட்டு, மக்களின் நெருக்கடியைத் தவிர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா கால முதல்கட்ட நிவாரண நிதியான 2000 ரூபாயை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றிடுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் அறிவுறுத்தியுள்ளேன்.
கொரோனாவின் இரண்டாவது அலையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் நோய்ப் பரவல் சங்கிலியை உடைத்திடவும், மூன்றாவது அலை குறித்த மருத்துவத்துறை வல்லுநர்களின் எச்சரிக்கையை மனதில் கொண்டு முன்னேற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொள்ளவும் இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறேன். உடன்பிறப்புகளாம் உங்களின் உறுதுணையை எதிர்பார்க்கிறேன்.
உணவு சமைப்பதற்கு ஏற்ற இடங்களைத் தேர்வு செய்து, தரமான – நிறைவான வகையில் உணவைச் சமைத்து அவற்றைப் பொட்டலங்களாக மக்களுக்கு வழங்கிடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று – கொரோனா கால நெறிமுறைகளுடன் செயல்பட வேண்டும் என தி.மு.கழகத்தின் அனைத்து நிர்வாகிகளையும் களப்பணியாற்றும் உடன்பிறப்புகளையும் கேட்டுக் கொள்கிறேன்.ரோனா தொற்றுச் சங்கிலியைத் தகர்ப்பதற்கான முதல் நடவடிக்கை என்பதை உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். பிணி நீக்கும் போர்க்களம் இது. இதில், பசிப் போக்கும் பெரும்பணியை மேற்கொள்வீர். என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via