சற்றே வித்தியாசமாய் ஒரு கல்யாணம்: விமானத்தில் பறந்தபடி திருமணம்!

by Editor / 23-05-2021 04:11:30pm
சற்றே வித்தியாசமாய் ஒரு கல்யாணம்: விமானத்தில் பறந்தபடி திருமணம்!

திருப்பரங்குன்றம்: மதுரை - தூத்துக்குடி இடையே தொழிலதிபரின் மகன் திருமணம் நடுவானில் விமனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபர் மகன் ராகேஷ். மதுரை தொழிலதிபர் மகள் தீக்சனா இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவர்களின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட பெற்றோர்கள், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை (வாடகைக்கு) முன்பதிவு செய்தனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் 161 பயணிகளுடன் அந்த விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது. இதில் மகமகன் மற்றும் மணமகளின் உறவினர்களுக்கு மட்டும் பிரத்தோகமாக அனுமதிக்கப்பட்டனர்.(வெளிநபர்களுக்கு அனுமதியில்லை). விமானத்தில் சென்ற அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்து கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தியபின் அனுமதிக்கப்பட்டனர்.

விமானம் காலை 7.30 மணிக்கு புறப்பட்ட நிலையில் நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்ட திருமணம் நடைபெற்றது. விமானம் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

விமானத்தில் திருமணம்: நீருக்கடியில் திருமணம், பாராசூட்டில் பறந்து கொண்டு திருமணம் என இதுபோன்ற சம்பவங்களை வெளிநாடுகளில் நடப்பதை கேள்விப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் மதுரையில் விமானத்தில் திருமணம் நடத்துவது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் அமைந்தது.

கரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திருமணத்தில் அனைவரும் கரோனா பரிசோதனை செய்திருந்தாலும் சமூக இடைவெளியில்லாமல், முகக்கவசம் அணியாமலும் பங்கேற்றது தவறானது என சமூகஆர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via