ஏரல் குரங்கணி முத்துமாலையம்மன் கோவில் உண்டியல்களை உடைத்து பல லட்சம் காணிக்கை கொள்ளை.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் அருகே உள்ள குரங்கணி முத்துமாலையம்மன் கோவில். இந்த கோவிலில் வருடம்தோறும் ஆணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த நிலையில் கடந்த 15 ஆம் இந்த கோவிலில் திருவிழா நடந்தது. அதைத் தொடர்ந்து 22 ஆம் தேதி 8 ம் திருநாள் சிறப்பு பூஜைகளும் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தார்கள். மேலும் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.
இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் இன்று காலை பூஜை செய்வதற்காக கோவில் பூசாரி கோவிலை திறந்துள்ளார். அப்போது பூசாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.கோவிலில் நாராயணர் சந்நதி முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலும், துர்க்கையம்மன் சந்நதி முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் வளாகத்தை சுற்றிலும் தேடி பார்த்தார். அப்போது கோவிலுக்கு பின்புறம் இரண்டு உண்டியல்களும் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் அதன் அருகே சில்லறை நாணயங்கள் சிதறி கிடந்தது. இந்த கோவிலில் 11 நிரந்தர உண்டியலும், தற்போது நடந்த திருவிழாவிற்காக 6 தற்காலிக உண்டியல்களும் அமைக்கப்பட்டிருந்தது. திருவிழா நிறைவடைந்த நிலையில் உண்டியலில் லட்சக்கணக்கான ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவில் பூசாரி ஏரல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி உண்டியல் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏரல் அருகே பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : ஏரல் குரங்கணி முத்துமாலையம்மன் கோவில் உண்டியல்களை உடைத்து பல லட்சம் காணிக்கை கொள்ளை.



















