இளைஞர்களின் ஆடைகளை களைந்து வன்கொடுமை: ராமதாஸ் கண்டனம்

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக பட்டியலின இளைஞர்கள் இருவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல், அவர்களின் ஆடைகளை களைந்து, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்திருக்கிறது. அவர்கள் வைத்திருந்த பற்று அட்டையை பறித்து அதிலிருந்து ரூ. 5000 பணத்தை கொள்ளையடித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் அவர்களிடமிருந்து தப்பி, ஆடைகள் இன்றி வீடு திரும்பியுள்ளனர். பட்டியலின இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்தக் கொடுமை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இரு சக்கர ஊர்தியில் வந்த பட்டியலின இளைஞர்களை தடுத்து நிறுத்திய 6 பேர் கொண்ட கும்பல், முதலில் அவர்களின் சாதி குறித்து விசாரித்திருக்கிறது. அவர்கள் பட்டியலினத்தவர்கள் என்று தெரியவந்த பிறகே அவர்களை தாக்கி வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில் இது சாதிய நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது உறுதியாகிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றாலும் கூட, இதன் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதை விசாரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Tags :