இந்தியா - பாகிஸ்தான் போரின் பொன்விழா கொண்டாட்டம்

by Editor / 30-07-2021 08:38:39pm
இந்தியா - பாகிஸ்தான் போரின் பொன்விழா கொண்டாட்டம்


இந்தியா - பாகிஸ்தான் போரின் பொன்விழா - 2021 கொண்டாட்டத்தில், போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றி நினைவுப்பரிசு வழங்கி  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவுரவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (30.07.2021) கலைவாணர் அரங்கத்தில், 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா, பாகிஸ்தானை வென்று வங்கதேசம் என்ற  தனிநாட்டை உருவாக்கிய வரலாற்று வெற்றியின்  பொன்விழா  நடைபெற்றது.


 இந்நிகழ்வின் வரலாற்று நாயகர்களாக வருகை புரிந்த 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தனது வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்து, முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது,
இந்திய இராணுவத்திற்குத் தமிழர்கள் தொடர்ந்து தம்முடைய பங்களிப்பினைச் செலுத்தி வருவதை குறிப்பிட்டு பேசினார். மேலும், தாய்நாட்டிற்காக இராணுவ வீரர்கள் தம் இன்னுயிரையும்  தியாகம் செய்ய தயங்குவதில்லை என  புகழாரம் சூட்டிய  முதலமைச்சர் ஸ்டாலின், அவர்தம் குடும்பங்களுக்கு உதவுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். 


மேலும், வரலாற்று ரீதியாக பார்க்கும் போதும் தமிழ்நாடு எப்போதுமே நாடு காக்கும் பணிக்கு தம்மை அர்ப்பணித்து வருகிறது எனக் குறிப்பிட்டு, 2.12.1962 அன்று சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ  திடலில் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டு பாதுகாப்பு  நிதி வசூல் கூட்டத்தில், அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக திகழ்ந்த முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்கள்  சில மணி நேரங்களில் 35 ஆயிரம் ரூபாய் நிதி  திரட்டி பேரறிஞர் அண்ணா அவர்களிடம் வழங்கி, அவர் மூலம் அன்றைய முதலமைச்சர் காமராசர் அவர்களிடம் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.  


மேலும், 1971-இல் போர் நிகழ்ந்த போது, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அன்றைய பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களை சென்னைக்கு அழைத்து தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில் நாட்டு பாதுகாப்பு நிதியாக 6 கோடி ரூபாய் வழங்கியதை நினைவு கூர்ந்த  முதலமைச்சர் அவர்கள், அன்றைய சூழலில் இந்தியா முழுமைக்கும் வசூலான 25 கோடி ரூபாயில், தமிழ்நாடு வழங்கிய  6 கோடி ரூபாய் என்பது நான்கில் ஒரு பங்கு நிதியாகும் என்று குறிப்பிட்டார்.
மேலும், முதலமைச்சர் பேசும்போது,


வங்கதேசப் போரில் கலந்து கொண்ட மாவீரர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவர் இராணுவத்தில் இருக்கிறார் என்றால், அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமே இராணுவத்தில் இருப்பதாகத்தான் அர்த்தம் என்று குறிப்பிட்டார்.


நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்ட குடும்பங்களுக்கு நாம் முதலில் மரியாதை செலுத்தியாக வேண்டும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் அவர்கள், இத்தகைய போர் வீரர்களோடு சேர்ந்து நிற்பதில் பெருமை அடைகிறேன். இப்போரில் உயிர்நீத்த வீரர்களின் துணைவியர்களுக்கும் எனது வீரவணக்கங்கள் என்றார்.


இவ்விழாவில், இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணித்த வெற்றி தீபம் தென் மண்டல இராணுவத் தளபதியால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம்  வழங்கப்பட்டதுடன் மேடையில் வைக்கப்பட்டு, வெற்றி தீபத்திற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via