இன்றுமுதல் தென்மாவட்ட பேருந்துக்கள் கிளாம்பாக்கம் புதிய பேருந்துநிலையத்தில் ஸ்டாப். 

by Editor / 31-12-2023 08:20:19am
இன்றுமுதல் தென்மாவட்ட பேருந்துக்கள் கிளாம்பாக்கம் புதிய பேருந்துநிலையத்தில் ஸ்டாப். 

இன்று முதல், (டிச.31) முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள், தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள சிஎம்பிடி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இன்று முதல் இயக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  திறந்துவைத்தார். சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள் மற்றும் 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வசதிகள் உள்ளன. தினமும் 2310 பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவமனை, கழிவறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஏடிஎம் மையம்,நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஓய்வெடுக்கும் அறை, சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர்  என பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 14 நடை மேடைகள்,நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகளும் உள்ளன.

கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயங்கும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும். பெங்களூரு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே இயங்கும். தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் மட்டுமே வரும், கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லாது.

அரசு விரைவு பேருந்துகளை பொறுத்தவரை முழுவதுமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயங்கும். சாதாரண நாட்களில் 300 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 360 எஸ்இடிசி பேருந்துகளும் இயக்கப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
சென்னை மாநகர பேருந்துகளைப் பொறுத்தவரை இன்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கோயம்பேடு புறப்படும். அதேபோல 2 நிமிடத்திற்கு ஒருமுறை தாம்பரத்திற்கும், 3 நிமிடங்களுக்கு ஒருமுறை கிண்டிக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்க்பட்டுள்ளது.

அரசு விரைவு பேருந்துகள்  அல்லாத விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை ஆகிய 6 போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும். பொங்கல் பண்டிகை வரை இந்த நிலை நீடிக்கும். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள   ஆம்னி பேருந்துகள் பொங்கல் வரை சென்னை நகரத்தில் இருந்து இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் இன்றுமுதல் முழுமையாக தென்மாவட்டமக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.

 

Tags : இன்றுமுதல் தென்மாவட்ட பேருந்துக்கள் கிளாம்பாக்கம் புதிய பேருந்துநிலையத்தில் ஸ்டாப். 

Share via