உதவி கமி‌ஷனர் என கூறி சைரன் காரில் வந்த சென்னை வாலிபர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

by Admin / 03-08-2021 04:18:52pm
    உதவி கமி‌ஷனர் என கூறி சைரன் காரில் வந்த சென்னை வாலிபர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

உதவி கமி‌ஷனர் என கூறி சைரன் காரில் வந்த சென்னை வாலிபர்



திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சைரன் வைத்த காருடன் ஒரு டிப்டாப் ஆசாமி இறங்கினார்.அங்குள்ள சுங்கச்சாவடி முன்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தியபோது தான் உதவி கமி‌ஷனர் என்றும், தற்போது அவசர பணிக்காக திண்டுக்கல் வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த அடையாள அட்டையை பார்த்தபோது அது போலி என தெரியவந்தது. இதனையடுத்து பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
போலீசார் விசாரணையில் அவர் சென்னை கொளத்தூர், தென்பழனிநகர், ஜீவாத்தெருவில் உள்ள ஒரு அப்பாட்மெண்டில் வசித்து வரும் சின்னப்பையன் மகன் விஜயன் (வயது41) என தெரியவந்தது.

அவர் வைத்திருந்த அடையாள அட்டையை போலியாக இவரே தயாரித்ததும் போலீசார் என நம்ப வைக்க டம்மி துப்பாக்கியை வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் வீட்டை விட்டு கிளம்பிய விஜயன் கோவைக்கு வந்துள்ளார். அங்கு செக்கானபாளையம் நடுவீதியை சேர்ந்த ஜெயமீனாட்சி என்பவருக்கு சொந்தமான வாகனத்தை அரசு வாகனம்போல ஜீ-0515 என்று மாற்றி அதில் சைரன் பொருத்தி போலீஸ் போல் வலம் வந்துள்ளார்.

தேனிக்கு சென்று விட்டு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி சோதனைச்சாவடி அருகே வந்தபோது இவர் போலி ஆசாமி என தெரிய வந்தது. ஏ.டி.எஸ்.பி. கமலேசன், டி.எஸ்.பி.க்கள் சுகுமார், ராஜபாண்டி, பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் தான் சிறுவயது முதல் போலீஸ் அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்று ஆசைபட்டதாகவும் அதற்காக சைரன் வைத்த வாகனத்தில் பொம்மை துப்பாக்கியை வைத்து போலி அடையாள அட்டையை தயாரித்து வலம் வந்ததாக தெரிவித்தார்.

இருந்தபோதும் சென்னையில் இருந்து தேனி மற்றும் திண்டுக்கல் வந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் தான் போலீஸ் அதிகாரி என கூறி வேலை வாங்கி தருவதாகவோ, அல்லது வேறு முறையிலோ மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அவர் பயன்படுத்தி வந்த வாகனத்தின் உரிமையாளரான ஜெயமீனாட்சி என்பவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? என கூற மறுத்து விட்டார். இதனால் மோசடிக்கு அவரும் உடந்தையாக இருந்தாரா? என்று விசாரணை நடத்த உள்ளனர். மேலும் உண்மையில் விஜயன் என்ன வேலை செய்கிறார்? இவரது குடும்ப பின்னணி குறித்தும் விசாரணை நடத்த அவர்களின் உறவினர்களை வரவழைக்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட விஜயன் நிலக்கோட்டை கோர் ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

 

Tags :

Share via