நாகத்தின் காவலில் தவம் செய்த அப்பரானந்த சித்தர்.(தொகுப்பு)
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம்
நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது. இவ்வூர் முற்காலத்தில் ‘ஸ்ரீரங்க பூபால சமுத்திரம்’ என அழைக்கப்பட்டது. இங்கு அப்பரானந்தா சுவாமிகள் வந்து தவம் புரிந்த பின் ‘நிஷ்டைபுரி’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி நிட்டைபுரி என மாறி, இறுதியில் ‘நெட்டூர்’ என பெயர் பெற்றது.இவ்வூரில்தான் மிகப்பெரிய அதிசய அருள் சக்தி குடிகொண்டுள்ளது. ஆம்.. அகத்தியப் பெருமானுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த முருகப்பெருமான் சன்னிதிக்குள், அப்பரானந்தா சுவாமி சமாதி அமைந்திருக்கிறது. இது எங்குமே காணக்கிடைக்காத அற்புதத் தரிசனம். குருவின் மூலஸ்தானம் அருகே சமாதி நிலை யாருக்கு கிடைக்கும்?. அப்படி கிடைத்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய மகானாக திகழ்ந்திருக்கிறார் என்பது புலப்படும்.
யார் இந்த அப்பரானந்தா சுவாமிகள்?. இவர் எங்கிருந்து இவ்வூருக்கு வந்தார்?தூத்துக்குடிக்கு அருகில் உள்ள பட்டினமருதூரில், சகல கலைகளிலும் வல்லவரான மகாராஜப் புலவர் வாழ்ந்து வந்தார்.
இவரது மனைவி மதுரவல்லி. ஆதிமூலப் புலவர், ஆறுமுகப் புலவர், அருணாசலப் புலவர், கந்தசாமிப் புலவர், நல்ல குமாருப் புலவர், சங்கிலி வீரப் புலவர், முத்தம்மாள், அய்யம்பெருமாள் புலவர் ஆகிய எட்டுபேர் இவர்களின் குலத்தோன்றல்கள்.
இவர்களில் அய்யம்பெருமாள் தான் பிற்காலத்தில் அப்பரானந்தா சுவாமிகளானார்.
குழந்தைகளுக்கு பக்தி, உண்மை, ஒழுக்கம், கல்வி ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தனர் பெற்றோர்.
முதல் ஆறு பேருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. முத்தம்மையை ஸ்ரீரெங்க பூபாலசமுத்திரத்தைச் சேர்ந்த வேலுமயில் பண்டிதருக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.
தம்பி அய்யம்பெருமாள் மீது பாசம் கொண்ட முத்தம்மாள், அவரையும் தன்னுடன் அழைத்து வந்தார்.
இதனால் அக்காள் வீட்டில் பாதி நாளையும் தனது சொந்த ஊரில் மீதி நாளையும் கழித்து வந்தார் அய்யம்பெருமாள்.
சுரண்டைப் பகுதியில் வாழ்ந்தவர், குழந்தை முக்தானந்த தேசிகர்.
அவர் திருக்குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்றுவிட்டுப் பட்டினமருதூர் வந்து சேர்ந்தார். அங்கு விளையாடுகின்ற சிறுவர் கூட்டத்தில் அய்யம்பெருமாளைக் கண்டார். தமக்குத் தொண்டு செய்வதற்கேற்றச் சீடன் என்று நினைத்தார்.
அய்யம்பெருமாளை அழைத்து, ‘உன்னை நீ அறிவாயாக' என்று கூறி திருநீறு வழங்கி உபதேசம் செய்தார்.
அன்று முதல் குழந்தை முக்தானந்த தேசிகரை குருவாக ஏற்று, அவர்வழி நடந்தார் அய்யம்பெருமாள்.
குருவுடன் பல சிவ தலங்களுக்குச் சென்றார். இறுதியில் இருவரும் மதுரையில் தங்கினர்.
இந்த நிலையில் அய்யம்பெருமாளைக் காணாமல், அவரது பெற்றோர் தேடத் தொடங்கினர்.
குல தெய்வத்திடம் வந்து முறையிட்டனர். ‘உன் மகன், பரிசுத்தமான தேசிகனோடு மதுரையில் உள்ளான்' என வாக்கு கிடைத்தது. மறுநாளே மதுரைக்கு ஓடோடிச் சென்றார், மகாராஜப் புலவர்.
அங்கே குருவுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார் அய்யம்பெருமாள். மகாராஜப் புலவரைக் கண்ட குழந்தை முக்தானந்த தேசிகர், ‘இவன் உன்னுடைய மகனல்ல.. ஞானி' எனக் கூறி அய்யம்பெருமாளை, தந்தையோடு அனுப்பிவைத்தார்.
தந்தையும், மகனும் பட்டின மருதூர் திரும்பினர். அது முதல் அய்யம்பெருமாள் திடீர் திடீரென்று மாயமாக மறைந்து விடுவார். அவருக்கு கால்கட்டு போட்டால் சரியாகி விடும் என பெற்றோர் நினைத்தனர்.
இதற்காக களக்காட்டில் மாதவப் பண்டிதரின் மகள் இருளகற்றி அம்மையைத் திருமணம் செய்ய பேசி முடித்தனர். மணவறையில் தாலிக் கட்டும் சமயம், அய்யம்பெருமாள் மாயமாய் மறைந்து விட்டார். அனைவரும் அதிர்ந்தனர்.பெண்ணின் பெற்றோர், ‘இவன் பேய் போல.. இவன் எப்படி நம் பெண்ணை வைத்து காப்பாற்றுவான்' என வருந்தினர். அப்போது அய்யம்பெருமாளின் சகோதரி முத்தம்மை, ‘தம்பி! உன்னை நானும், உன் அன்பர்களும் அறிவோம்.
மற்றவர்கள் அறியமாட்டார்கள். தயவு செய்து மணவறையில் காட்சிக் கொடு' என வேண்டினார்.
அதன்பின் அவர் மணவறையில் தோன்றி இருளகற்றியை மணம் செய்து கொண்டார். தம்பதியர் பட்டினமருதூருக்கு வந்து சேர்ந்தனர்.சில நாட்களிலேயே, தன்னுடைய தவத்திற்கு இல்லறம் தடையாக இருப்பதை அய்யம்பெருமாள் உணர்ந்தார். எனவே முத்தம்மையின் இல்லம் தேடி வந்தார். அங்கு சிற்றாற்றங்கரையில் தவமேற்றினார். இருளகற்றி அம்மையும் அங்கேயே வந்து விட்டார்.
சுவாமிகள் முச்சந்தியில் அமர்ந்து நிஷ்டையில் தவமேற்றினார்.நாட்கள் கடந்து பல மாதமாகியும் தவம் முடிந்தப்பாடில்லை. அவரைச் சுற்றிக் கரையான் புற்று உருவானது. மழை, வெயில் தாக்கி விடக்கூடாது என முத்தம்மாளும், இருளகற்றியும் தங்களது முந்தானைச் சேலையால் கரையான் புற்றை மூடி பாதுகாத்தனர். அய்யம்பெருமாளின் உடல் முழுவதும் கரையான் புற்றில் மறைந்து விட்டது. தமக்கையும், மனைவியும் உறக்கம் இல்லாமல், 20 நாட்கள் பக்தியோடு முப் புடாதி அம்மனை நோக்கி நோன்பிருந்தனர்.அய்யம்பெருமாளின் தவத்தை கலைக்கும் பொறுப்பை அன்னையானவள், விநாயகப்பெருமானிடம் ஒப்படைத்தார்.
விநாயகர் யானை உருவம் கொண்டு தன் துதிக்கையால் புற்றை பெயர்த்து எடுத்து, சித்ரா நதியில் தூக்கி வீசினார். நீரில் புற்று மண் முழுவதும் கரைந்தது. அய்யம்பெருமாளின் உடல் குளர்ச்சி உண்டாயிற்று. இதனால் அவர் தவம் நீங்கி கரையேறினார். அவருக்கு ஆடை கொடுத்த தமக்கைக்கும், மனைவிக்கும் திருநீறு பூசி ஆசி வழங்கினார். அய்யம்பெருமாளிள் இந்த நீண்ட நிஷ்டையான தவத்தால்தான், இந்த ஊர் ‘நிஷ்டையூர்’ என்று வழங்கப்பட்டிருக்கிறது.இந்த சம்பவத்துக்கு பின் முப்புடாதி அம்மனை வழிபடுவதை வழக்கமாக்கினார் அய்யம்பெருமாள். ஒரு நாள் அன்னை, ‘நீ.. இல்லறத்தில் சிறப்புற வாழ வேண்டும்' என வாழ்த்தி, அழகிய வேல் ஒன்றைக் கொடுத்தார். அந்த வேலை, பக்தியுடன் நெட்டூரில் வைத்து வணங்கினார்.
அதன்பின் இல்லறத்தில் மனநிறைவுடன் ஈடுபட்டார். அதன் பயனாக அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார். பின்னர் அய்யம்பெருமாளின் மனைவியும் துறவறம் ஏற்றுக்கொண்டார். கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்து, இறை பணி செய்ய ஆரம்பித்தனர்.
சாதுகளுக்கு தவமேற்ற நல்ல இடம் வேண்டுமே.. எனவே நெட்டூரில் பூந்தோட்டத்தில் தவமேற்றினார்.
இவரைப் பற்றி அறியாத மேல்தட்டு மக்கள் இவரை நோக்கி கல் எறிந்தனர். ஆனால் அவர்கள் எறிந்த கல் ஒன்றுகூட அப்பரானந்தர் மீது படவில்லை. இதனால் பயந்து போன அவர்கள், அங்கிருந்து ஓடினர். பலர் மனம் திருந்தி, அவருக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர். பலர் கொடுத்த பொன், பொருட்களை, சைவ சமய வளர்ச்சிக்கு சித்தர் பயன்படுத்தினார்.
அப்பரானந்த சித்தர் ஓரிடத்தில் அமர்ந்திருப்பார். தவத்தில் இருக்கும் போது அகத்திக் கீரை, சோறு ஆகியவற்றைப் பிசைந்து மக்களுக்கு தருவார். இதனால் நோய் தீர்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வூரில் இருந்த வெற்றிலை கொடிகால் பயிரிடும் தொழிலாளிகள், சித்தரின் தவ உணவுக்கு பொருள் அளிப்பார்கள். இதனால் அவர்களின் கொடிகால் அமோக விளைச்சல் அடைந்தது. சித்தர் தவமிருக்க தனிமையை நாடிச் செல்லும் போதெல்லாம், இருளகற்றி அம்மை தினமும் முருகனின் வேலுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒரு முறை ஆலங்குளம் அருகே உள்ள ஒக்க நின்றான் பொத்தையில், அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அவரது தவம் பல மாதங்களைக் கடந்தது. உயிர்க் காற்றையே உணவாக கொண்டு தவமியற்றிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சொக்கம்பட்டி ஜமீன்தார் வடகரைப்பாண்டியன், அந்தப் பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை திகைக்கச் செய்தது. அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருக்க, அவர் முன்பாக இரண்டு நாகங்கள் படமெடுத்து காவல் காத்துக் கொண்டிருந்தன.ஜமீன்தார், சித்தரின் முன்பாக விழுந்து வணங்கினார். சுவாமிகள் தவம் கலைந்தது. ஆனால் கோபமடையவில்லை. தன்னோடு அரண்மனை வரவேண்டும் எனப் பணித்தார், ஜமீன்தார். அதற்கு சித்தர், ‘நீ இப்போது இங்கிருந்து செல். நான் 7 நாளில் அங்கே வருகிறேன்' என்று அருளினார். அது போலவே அரண் மனைக்குச் சென்றார். இந்தக் கால கட்டத்தில் ஜமீனின் சில பகுதிகளை ஜமீன்தார் இழந்திருந்தார். அதுகுறித்து சித்தரிடம் ஜமீன்தார் கேட்க, மூன்று விரலைக் காட்டினார். முருகன் அருளால் மூன்று மாதத்தில் அவருக்கு இழந்தப் பகுதி கிடைத்தது.
இதையடுத்து ஜமீன்தாருக்கு சித்தரின் மேல் அதீத பற்று ஏற்பட்டது. அவர் அடிக்கடி சித்தரை சந்திப்பதும், அவரை அரண் மனைக்கு அழைத்து உபசரிப்பதும் வாடிக்கையாகிப் போனது. ஒரு முறை சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்திருந்தார் சித்தர். அவரை தான் அமரும் அரியணையில் அமரச் செய்து அழகு பார்த்தார், ஜமீன்தார். அந்தச் சமயத்தில் எட்டையபுரம் ஜமீனின் தலைமை புலவர் கடிகை முத்து புலவர் அங்கு வந்தார். அவர் ‘யார் இந்தப் பரதேசி.. இவனுக்கு ஏன் இந்த மதிப்பு மரியாதை' என கிண்டல் செய்தார்.
அவரை மவுனமாக, புன்சிரிப்புடன் பார்த்தார் அப்பரானந்தா சித்தர். அந்த மவுனச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.
Tags :