ஆருத்ரா கோல்டு மோசடியில் தலைமறைவு ரூசோவை கைது செய்ய தனிப்படை
சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் தலா ரூ. 1 லட்சத்திற்கு 30 சதவீதம் மாதாந்திர வட்டி, 5 சதவீதம் கமிஷன் மற்றும் 1 கிராம் தங்கக் காசு பரிசு என்று ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடமிருந்து தனது 21 கிளைகளிலும் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் 2022ம் ஆண்டு மே மாதம் வரை டெபாசிட் வசூல் செய்தது சம்பந்தமான வழக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக, மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை அலுவலகத்தில் 1, 09, 255 டெபாசிட்தாரர்கள் தங்களது சுமார் ரூ. 2438 கோடி பணத்தை திருப்பிப்பெற்றுதரக் கேட்டு புகார் அளித்துள்ளனர். பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் இவ்வழக்கில் இதுவரை 23 பேரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்களின் 170 வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ. 102 கோடி முடக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சொந்தமான 98 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு அவற்றை முடக்கம் செய்ய அரசிடமிருந்து அரசாணை பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் துபாய் நாட்டிற்கு தப்பியோடியது கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக லுக் அவுட் சர்க்குலர் ரெட்கார்னர் நோட்டீஸ் அபுதாபி இண்டர்போல் போலீசார், 2023ம் ஆண்டு அக்டோபர் ராஜசேகரை கைது செய்துள்ளனர்.
Tags :