பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 3 பேருக்கு கொரோனா

by Admin / 06-08-2021 03:37:41pm
பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 3 பேருக்கு கொரோனா

 



   
கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே உள்ளது கொட்டாரம் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
 
இந்த முகாமில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேர் வசித்து வருகிறார்கள். இங்கு வசித்து வரும் இலங்கை அகதிகள் 6 பேருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் ஆவார்கள்.

இவர்கள் 6 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோட்டாரில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த 50 பேருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் முடிவு நேற்று தெரியவந்தது. இதில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுஉள்ளது. இதில் 8 வயது சிறுவன் 25 வயது வாலிபர் மற்றும் 40 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கொட்டாரம் பெருமாள்புரத்தில்உள்ள இலங்கை அகதிகள் முகாம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இங்கு கொட்டாரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, பிளீச்சிங் பவுடர் தூவும் பணி, கொசுமருந்து அடிக்கும் பணி போன்ற பல்வேறு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் முகமது தலைமையில் சுகாதார தூய்மைப் பணியாளர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via