வெண் பொங்கல் + குவாட்டர் + பணம்... வேலுமணிக்கு ஆதரவா போராட்டத்துக்கு போன தொண்டர்கள் குஷி...
வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவரது வீடு உள்ளிட்ட 53 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
மேலும் உள்ளாட்சித்துறையின் 811 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் வழங்கியதாகவும், இதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2018ம் ஆண்டு புகாரளிக்கப்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, எஸ்பி வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் புகார்கள் தொடர்பாக எஸ்பி வேலுமணியின் உறவினர்கள், நண்பர்கள் என 17 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலிசார், 53 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். குனியமுத்தூரில் உள்ள எஸ்பி வேலுமணி, அவருடைய சகோதர் எஸ்பி அன்பரசனின் வீடு மற்றும் வடவள்ளி அதிமுக பிரமுகர் சந்திர சேகர் வீடு, அவர்கள் நடத்தி வரும் ஆலயம் அறக்கட்டளையின் அலுவலகம் என கோவையில் மட்டும் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வைத்து எஸ்.பி வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி பல்வேறு விவரங்களை சேகரித்தனர். அப்போது அங்கு வந்த அதிமுக நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே வருமான வரித்துறையினர் சோதனை நடக்கும் குனியமுத்தூர் வீடருகே ஏராளமான அதிமுகவினர் குவிந்துள்ளதால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணி, சந்திரசேகர் வீடுகளில் குவிந்துள்ள அ.தி.மு.க தொண்டர்களுக்கு தோசை, வெண் பொங்கல், வடை, டீ , காபி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும் ஆண்களுக்கு மதுபான விருந்துகளுடன் ஏகபோகமாக கவனித்து வருகின்றனர்.
Tags :