லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் மருத்துவ மனையிலிருந்து தப்பியோட்டம்

by Editor / 02-07-2024 10:51:10pm
லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் மருத்துவ மனையிலிருந்து தப்பியோட்டம்

திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த துணை தாசில்தார் தப்பியோட்டம்  .

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள வெங்கடாசலபதி நகரில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. இதற்கு தடையில்லா சான்று வழங்க திருமண மண்டபத்தின் மேலாளர் துரைராஜிடம், துணை தாசில்தார் பழனியப்பன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுதொடர்பாக புகார் ஒன்றை அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுரையின்படி துரைராஜ் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை துணை தாசில்தார் பழனியப்பனிடம் வழங்கினார். அப்போது பழனியப்பன் உடன் இருந்த கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியிடம் பணத்தை வாங்குமாறு அறிவுறுத்தினார். அதன்பேரில் அவர் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அப்போது துணை தாசில்தார் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பெரம்பலூர் அரசு மருத்துவசமனையில் சேர்ந்தார். இதனால் கிராம நிர்வாக அலுவலர் மட்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணை தாசில்தார் இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் பழனியப்பனை தேடி வருகின்றனர்

 

Tags : துணை தாசில்தார் மருத்துவ மனையிலிருந்து தப்பியோட்டம்

Share via