நேபாள முன்னாள் பிரதமரின் பேத்தி மனிஷா கொய்ராலா
(ஆக.16 பிறந்த நாள் )
மனிஷா கொய்ராலா(ஆக்ஸ்ட் 16,1970) நேபாளில் பிறந்தார். நேபாள-இந்திய நடிகையான இவர், ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், மணிப்பூரி நன்கு அறிந்தவர். நேபாள மொழியில் இவர் நடித்த முதல் படமான ஃபெரி பெட்டாலா 1989ல் வெளிவந்தது. ஹிந்தியில் இவரது முதல் படமான சௌடாகர் 1991ல் வெளிவந்தது.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் பிறந்த மனிஷா, நேபாளத்தின் 22-வது பிரதமர் பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலாவின் பேத்தி ஆவார். 1991-ம் ஆண்டு வெற்றி பெற்ற 'சவுதகர்' மூலம் இந்தி திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா நடிகையாக அறிமுகமானார். இந்தி மட்டுமன்றி தமிழ், நேபாளி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மனிஷா, சில ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார். 2012-ம் ஆண்டு அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகி, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போதுள்ள கரோனா தொற்று சூழல் தன்னை அச்சுறுத்தவில்லை என்று மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் இதை விட மோசமான புயல்களை என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன். ஒப்பீட்டளவில் இது எளிதாகவே இருக்கிறது. கரோனா தொற்று சூழல் என்னை அச்சுறுத்தவில்லை. நான் அமைதியாக இருக்கிறேன். தியானம் செய்கிறேன், யோகா செய்கிறேன். செடிகளுடன் நேரத்தைச் செலவிடுகிறேன். இயற்கையுடன் பேசுகிறேன். பல வருடங்களுக்குப் பின் மும்பையில் பறவைகளின் கீச்சுகள் கேட்கின்றன. எனது பெற்றோருடன் நேரம் செலவிடுகிறேன்.
இதற்கு முன் இவ்வளவு அமைதியை, சாந்தத்தை நான் உணர்ந்ததில்லை" என்று கூறியுள்ளார் மனிஷா கொய்ராலா.திருமணம் செய்து கொள்ளாததைப் பற்றிப் பேசுகையில், "ஒரு சமயத்தில் கண்டிப்பாக நான் ஒரு உறவில் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆனால், அது வருடங்கள் ஆக ஆக மாறிவிட்டது. சமீப காலங்களில், எனது நோய்க் காலத்துக்குப் பிறகு, தனியாக இருப்பதிலேயே சந்தோஷமாக இருக்கிறேன். இதுதான் என்னை நானே சரியாக அறிந்துகொள்ளக் கிடைத்திருக்கும் நேரம்" என்று மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்.
Tags :