ஆப்கனை கைப்பற்றும் தலிபான்கள்: அதிபர் பதவி விலகல்?

by Editor / 15-08-2021 05:48:43pm
ஆப்கனை கைப்பற்றும் தலிபான்கள்: அதிபர் பதவி விலகல்?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்த நிலையில், அமெரிக்க தூதரகத்திலிருந்து அலுவலர்களை அந்நாட்டு ராணுவம் வெளியேற்றிவருகிறது. அதேபோல், இடைக்கால அரசிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர் ராய்ட்டர்ஸ் செய்தியாளரிடம் கூறுகையில், "காபூலுக்குள் அனைத்து திசைகளிலிருந்து தலிபான்கள் வந்த வண்ணம் உள்ளனர்" என்றார். இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், "காபூலை அமைதியான முறையில் ஒப்படைக்கும்படி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.அமைதியான முறையில் அதிகார மாற்றம் ஏற்படும் வரை காபூலின் நுழைவாயில்களில் காத்திருக்கும்படி தலிபான் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க படைகளால் தலிபான்கள் காபூலிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால், அமெரிக்க படைகள் தற்போது வெளியேறிய நிலையில், ஆப்கான் முழுவதையும் தலிபான்கள் வேகமாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.காபூலை தலிபான்கள் சுற்றிவளைத்தது குறித்து அதிபர் அஷ்ரஃப் கனியிடம் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை. உள்ளூர் தலைவர்கள், கூட்டணி நாடுகளிடம் ஆப்கன் நிலவரம் குறித்து அவசர ஆலோசனை மேற்கொண்டுவருவதாக கனி  தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via