பிரபலங்களின் பெயர்களை கூறி விருதுகளை அள்ளிய சிறுவன்

by Editor / 15-08-2021 08:26:37pm
பிரபலங்களின் பெயர்களை கூறி விருதுகளை அள்ளிய சிறுவன்

 

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்- நந்தினி தம்பதியின் மகன் தேஜஸ். 3 வயதான மகனின் தனித்திறனை கண்டு பெற்றோர் வியந்தனர். இதனையடுத்து மகன் தேஜஸின் தனித்திறனை மெருகேற்ற முனைந்து அதற்கான பயிற்சியும் அளித்தனர்.
அதன் பலனாக கடந்த ஒராண்டில் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் சிறப்பு டாக்டர் பட்டம் பெற்றார். இப்பட்டம் உள்பட 13 பதக்கங்களையும் சான்றிதழ்களையும் சிறுவன் தேஜஸ் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என அந்தக் காலம் முதல் சமகாலம் வரையிலான 102 பிரபலங்களின் பெயர்களை புகைப்படங்களை பார்த்த உடன் கடகடவென இரண்டு நிமிடம் 46 விநாடிகளில் கூறி சாதனை படைத்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் 51 வண்ண மீன்களின் பெயர்களையும் ஒரு நிமிடத்தில், 10 வகையான நாய் இனங்களை 23 வினாடிகளில், பத்து நாடுகளின் நாணயச் சின்னங்களை 7 வினாடிகளிலும், 19 மனித உறுப்புகளின் பெயர்களை 26 விநாடிகளில் கூறி சிறுவன் தேஜஸ் அசத்துகிறார்.
கொரோனா ஊரடங்கால் கிடைத்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக்கி சாதனை படைத்துள்ள சிறுவன் தேஜஸ் பட்டங்களை குவித்துள்ளார். மேலும் சிறுவன் மற்றும் அவனது பெற்றோருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via