தடுப்பூசி முகாம்களில் ஸ்டாலின் நேரில் ஆய்வு

by Editor / 19-09-2021 05:33:51pm
தடுப்பூசி முகாம்களில் ஸ்டாலின் நேரில் ஆய்வு

தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் இதுவரை 54 சதவீதம் பேருக்கு, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3ம் அலை பரவலை தடுக்கும் வகையில், ஓரிரு மாதங்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட, தமிழக அரசு திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒரே நாளில் 28.91 லட்சம்

பேருக்கு தடுப்பூசி

அந்த வகையில் கடந்த 12ந்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து வாரம் ஒருமுறை இதுபோன்ற சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.அதன்படி, இரண்டாவது கட்டமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 20 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதற்காக 15 லட்சம் எண்ணிக்கையிலான கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதில் கோவேக்சின் 2வது தவணையும், கோவிஷீல்டு முதல் மற்றும் 2வது தவணையும் செலுத்தப்படுகிறது.

பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட உதவிகள் செய்தனர். அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடாதவர்கள் வந்து ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னையில் இன்று 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்படி. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 26.8.2021 அன்று 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.12.9.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 21 லட்சத்து 48 ஆயிரத்து 526 முதல் தவணை தடுப்பூசிகள், 7 லட்சத்து 42 ஆயிரத்து 495 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று (19 ந் தேதி) சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில், மொத்தம் 1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய்) விஷு மகாஜன், உடனிருந்தார்.

எந்தவித முன்னறிவிப்புமின்றி தடுப்பூசி முகாமில் முதல்வர் திடீரென ஆய்வு செய்துள்ளார்

சென்னையில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த நேரங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் சென்னையில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via