சபரிமலையில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்.24 நாட்களில் வருமானம் மற்றும் காணிக்கையாக 125 கோடி.

by Editor / 11-12-2022 10:28:59am
சபரிமலையில்  நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்.24 நாட்களில் வருமானம் மற்றும் காணிக்கையாக 125 கோடி.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. நவம்பர் 16-ந் தேதி நடை திறந்தது முதல் தினசரி சராசரியாக 50 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


சபரிமலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெரும் வெள்ளம், இளம் பெண்களின் வருகை மற்றும் கோவிட் காரணமாக 5 ஆண்டுகளாக பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டதால் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் தினமும் வருகிறார்கள்.


இந்த நிலையில் சபரிமலையில் தொடர்ந்து நான்காவது நாளாக கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று 94,369 பக்தர்களும், வெள்ளிக்கிழமை 1,10,133 பக்தர்களும், வியாழக்கிழமை 96,030 பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர். இன்று ஞாயிறுக்கிழமை என்பதால் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. நாளை 1.07 லட்சம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.


இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட 24 நாட்களில் 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் சபரிமலை சன்னிதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சபரிமலையில் நேற்று வரை 16 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என கூறினார். நடை திறக்கபட்ட 24 நாட்களில் வருமானம் மற்றும் காணிக்கையாக 125 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றார்.


அதிகப்படியான பக்தர்கள் வருகை காரணமாக நிலக்கல் பார்க்கிங் மைதானதில் வாகனங்கள் நிரம்பின, எருமேலி முதல் பம்பை வரை சபரிமலை செல்லும் சாலையில் வாகனங்கள் சாலையின் ஒருபுறம் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கே.எஸ்.ஆர்.டி.சி.யின் நீண்ட தூர பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து பம்பைக்கு வந்த 227 பேருந்துகள் பல்வேறு இடங்களில் சிக்கின.இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே நிரம்பிவழிவதால் தரிசனம் செய்ய 10 முதல் 12 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சிவருகின்றனர்.

சபரிமலையில்  நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்.24 நாட்களில் வருமானம் மற்றும் காணிக்கையாக 125 கோடி.
 

Tags :

Share via