பௌர்ணமி கிரிவலம்   சாலையின் வெப்பம் தணிக்க தண்ணீர் பீச்சி அடித்து குளிர்விப்பு.

by Editor / 15-11-2024 10:30:14pm
பௌர்ணமி கிரிவலம்   சாலையின் வெப்பம் தணிக்க தண்ணீர் பீச்சி அடித்து குளிர்விப்பு.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.ஐப்பசி மாத பௌர்ணமி இன்று அதிகாலை 5:40 மணிக்கு தொடங்கி நாளை 16ம் தேதி அதிகாலை 3:33 மணிக்கு நிறைவடைய உள்ளதால் இன்று இரவு பௌர்ணமி கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக ஆற்றில் சொல்லாமல் வரும் வெள்ளம் போல் திருவண்ணாமலை நகரில் மக்கள் வெள்ளம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. கடந்த பல வருடங்களாக இல்லாத பக்தர்கள் கூட்டம் கடந்த மூன்று வருடங்களாக ஆந்திரா, தெலுங்கானா பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது இரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் வெளி மாநிலத்திலிருந்து வரும் பக்தர்கள் அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் எதிரே கற்பூரம் மற்றும் நெய் தீபம் ஏற்றி தங்களது கிரிவலத்தை தொடங்குகின்றனர். ஆனால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கற்பூரம் மற்றும் நெய்விளக்கு ஏற்றக்கூடாது என தடை விதித்த நிலையில் வெளி மாநிலத்திலிருந்து வந்த பக்தர்கள் சாலையை ஆக்கிரமித்து சாலை முழுவதும் கற்பூரம் மற்றும் நெய் தீபம் உள்ளிட்டவற்றை சாலையிலேயே ஏற்றி வருகின்றனர். தற்போதும் நட்ட நடு சாலையில் வெளி மாநில பக்தர்கள் கற்பூரம் மற்றும் நெய் தீபங்கள் ஏற்றி வருவதால் சாலை முழுவதும் வெப்பமடைந்து வருகிறது. இதனை குளிர்விக்கும் விதமாக தீயணைப்பு துறையினர் பற்றி எரியும் தீ மீதி தண்ணீர் பீச்சி அடித்து சாலையை குளிர்விக்கும் பணியில் பல மணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வெளி மாநில பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ளும் பொழுது மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும், வெளிமாநில பக்தர்கள் வழிபட ஏதுவாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவர்கள் மொழியில் பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

 

Tags : பௌர்ணமி கிரிவலம்   சாலையின் வெப்பம் தணிக்க தண்ணீர் பீச்சி அடித்து குளிர்விப்பு.

Share via