மின்சாரம் தாக்கி பட்டதாரி உள்ளிட்ட 2 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த செ.கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராஜ் (35). விவசாயியான இவருக்கு பாஞ்சாலம் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இவரது உறவினரான பாஞ்சாலம் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.சி,பட்டதாரியான தீனதயாளன் (21) என்பவருக்கும் அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது.இந்த நிலையில் சுரேஷ் ராஜ் தனது விவசாய நிலத்தில் மாடு கட்டுவதற்காக அங்குள்ள மின்கம்பத்தின் ஸ்டே கம்பியை பிடித்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய புயல் மற்றும் மழையின் காரணமாக ஏற்பட்ட மின்கசிவால் அந்த ஸ்டே கம்பியில் மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் சுரேஷ் ராஜ் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தீனதயாளன் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக தீனதயாளன் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.மயங்கி விழுந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறியதை அடுத்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.இந்த விபத்து குறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : மின்சாரம் தாக்கி பட்டதாரி உள்ளிட்ட 2 பேர் பலி