திராவிட களஞ்சியம் என்ற பெயரில் சங்க இலக்கிய பதிப்புகள்

by Editor / 04-09-2021 05:41:01pm
திராவிட களஞ்சியம் என்ற பெயரில் சங்க இலக்கிய பதிப்புகள்

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இது தொடர்பான கொள்கை விளக்கக்குறிப்பும் வெளியிடப்பட்டது.இதில், பல அறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்குவது, தமிழ் பரப்புரைக் கழகம் அமைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளோடு சங்க இலக்கியத்தை பரவலாக்குவதற்காக சந்தி பிரித்து, பதிப்புகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கொள்கை விளக்கக்குறிப்பில் பத்தாவது அறிவிப்பாக இடம்பெற்ற அந்த அறிவிப்பில், "சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும் திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தொடராச் செலவினமாக ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே தமிழ் தேசிய அமைப்புகள், கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதே போல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை 'திராவிடக்களஞ்சியம்'என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத் திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.சங்க இலக்கியங்கள் என்றாலும் சரி, அதற்குப் பின்வந்த இலக்கியங்கள் என்றாலும் சரி எந்தவொரு தமிழ் நூல்களுக்கும் 'திராவிட இலக்கியம்' என்று பெயர்மாற்றம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்தகைய கொடுஞ்செயலை தமிழ் இளந்தலைமுறையினரும், இனமானத்தமிழர்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

"எல்லோரும் சங்க இலக்கியத் தொகுப்பையும் திராவிடக் களஞ்சியத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்கிறார்கள். பத்தாவது அறிவிப்பின்படி சங்க இலக்கியங்களை இந்த கால தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாக சந்தி பிரித்து செம்பதிப்புகளாக வெளியிடுவது என்பது ஒரு அறிவிப்பு. திராவிடக் களஞ்சியம் என்பது மற்றொரு அறிவிப்பு. இதில் திராவிடம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள், கால்டுவெல் காலத்திலிருந்து தற்போது அஸ்கோ பர்ப்போலா, ஆர். பாலகிருஷ்ணன் வரையிலான ஆய்வறிஞர்களின் கட்டுரைகள், கருதுகோள்கள், இட ஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, சமூக நீதி போன்றவை குறித்த கட்டுரைகள் இதில் இடம் பெறும்.

மூன்றாவதாக, தொல்காப்பியம் முதல் முத்தொள்ளாயிரம் வரையிலான தமிழ் செவ்வியல் இலக்கிய நூல்கள் ஒரே தொகுப்பாக, ஒரே இடத்தில் கிடைக்க வகை செய்யப்படும். இதற்காக வருடந்தோறும் 10 லட்ச ரூபாய் செலவிடப்படும். ஆகவே, எல்லாவற்றையும் ஒன்றாகக் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை" என பிபிசியிடம் கூறினார் தங்கம் தென்னரசு.

 

Tags :

Share via