உதயநிதியின் சட்டசபை கன்னிப்பேச்சு திமுகவினர் மேசையைத்  தட்டி உற்சாகம் 

by Editor / 18-08-2021 06:12:05pm
உதயநிதியின் சட்டசபை கன்னிப்பேச்சு திமுகவினர் மேசையைத்  தட்டி உற்சாகம் 

 

"தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மூவரையும் வணங்கி என்னுடைய கன்னிப்பேச்சை இந்த அவையில் பதிவு செய்கிறேன்" என்று திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றியுள்ளார். 


தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க சார்பில் உதயநிதி பேசினார். முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளதால், அவருடைய கன்னிப்பேச்சாக இந்த பேச்சு அமைந்தது. பேச்சின் துவக்கத்திலேயே தி.மு.க-வின் மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் என அனைவரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.. உதயநிதியின் நெருங்கிய நண்பர் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷிற்கு நன்றி சொல்லும்போது "முத்தமிழறிஞர் காலத்தில் அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி மாமா, அவருக்கு பிறகு இன்று என்னுடைய நண்பனாக தோளோடு தோள் நிற்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" 
"நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்" என்று பேச்சின் துவக்கத்திலேயே உதயநிதி குறிப்பிட்டார்.


 அதேபோல் மறைந்த பேராசிரியர் அன்பழகனை தனது பேச்சில் சுட்டிக்காட்டும்போது பேராசிரியர் தாத்தா என்றே அன்பழகனை குறிப்பிட்டார் உதயநிதி. நீதிக்கட்சியில் துவங்கி தி.மு.க வரை வரிசையாக உதயநிதி பட்டியலிட தி.மு.கவினர் மேசையைத் தட்டி அந்தப் பேச்சினை உற்சாகப்படுத்தினார்கள். உதயநிதியின் பேச்சின் துவக்கம் முழுவதும் அரசையும், அவரது தந்தையின் ஆட்சியைப் பற்றியுமே இருந்தது. குறிப்பாக திராவிட மாடல் அரசின் 'மாண்புமிகு முதல்வர்' என்று ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார். அதன் தொடர்ச்சியாக நூறு நாள்களில் தி.மு.க அரசு மேற்கொண்ட அனைத்துத் திட்டங்களையும் வரிசையாகப் பட்டியலிட்டார். உதயநிதியின் பேச்சுக்குத் தி.மு.க உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி அடிக்கடி உற்சாகப்படுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, "நீட் தேர்வு தமிழ்நாட்டின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. இதுவரை 14 மாணவ- மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணமும் நீட் தேர்வை ரத்து செய்வதுதான். இதை தி.முக.வின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தோம். இப்போது எதிர்கட்சிகள் நீட் தேர்வு குறித்த உங்கள் வாக்குறுதி என்ன ஆகிவிட்டது என்று கேட்கிறார்கள்.

இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். அ.தி.மு.க.அரசு நீட் தேர்வை தடுத்திருக்க வேண்டும். அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. மாண்புமிகு தமிழக முதல்வர் நீட் ஒழிப்பின் முதல்படியாக முன்னாள் நீதியரசர் ஏ.கே ராஜன் குழுவை அமைத்து கருத்துக்களைக் கேட்டு, அறிக்கை பெறப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்தை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்" என்றார்.தொடர்ந்து மகளிருக்கான இலவச பேருந்து, எய்ம்ஸ் பிரச்ணை உள்ளிட்டவற்றை தனது பேச்சில் உதயநிதி குறிப்பிட்டார்.

உதயநிதியின் கன்னிப்பேச்சை கேட்டுவிட்டு இறுதியாக அதற்கு முதல்வர் ஸடாலின் "நீட் தேர்வு பற்றி உதயநிதியின் கருத்தை அரசும் கவனித்தில் கொள்ளும். முன்னாள் நீதியரசர் ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை தி.மு.க அரசு மேற்கொள்ளும்" என்று பதில் அளித்தார்

 

Tags :

Share via