மத மோதலை தூண்டும் பேச்சு; எச். ராஜா மீது வழக்குப் பதிவு

by Staff / 07-02-2025 12:50:02pm
மத மோதலை தூண்டும் பேச்சு; எச். ராஜா மீது வழக்குப் பதிவு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பழங்காநத்தத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் பிப். 4-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. 

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், திருப்பரங்குன்றத்துக்குப் பதிலாக மதுரை பழங்காநத்தத்தில் பிப். 4 அன்று மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்களை எழுப்பக் கூடாது. ஆர்ப்பாட்டம் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றனர். இதன்படி, பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

 

Tags :

Share via