பெண் காவலரிடம் அத்துமீறல் எதிரொலி: மின்சார ரயில் வழித்தடங்களில் இரவுநேர போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.

சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் தங்க செயின் பறித்து, அவரிடம் அத்துமீறப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை மின்சார ரயில் வழித்தடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அனைத்து நடைமேடைகளிலும் இரவு 10 மணி முதல் 12 மணி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 25 மதிக்கத்தக்க பெண், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவரிடம் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கடந்த 15-ம் தேதி இரவு குடிபோதையில் தங்க செயின் பறிப்பில் ஈடுபட்டு அத்துமீறிய சத்தியபாலு என்பவரை மாம்பலம் ரயில்வே போலீஸார் கைது செய்து 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து, சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவம் எதிரொலியாக மின்சார ரயில், பறக்கும் ரயில் வழித்தடங்களில் இரவு 10 மணி 12 மணி வரை கூடுதலாக ரயில்வே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக ரயில்வே போலீஸ் உயரதிகாரிகள் கூறும்போது, “புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, போலீஸார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் மின்சார ரயில் வழித்தடங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் பகல், இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக, இரவு 10 மணிக்கு முதல் 12 மணி வரை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு நடைமேடையிலும் 3 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
Tags : பெண் காவலரிடம் அத்துமீறல் எதிரொலி: மின்சார ரயில் வழித்தடங்களில் இரவுநேர போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.