சென்னையில் இடியுடன் பலத்த மழை : சாலைகளில் வெள்ளம்; மரங்கள் சாய்ந்தன

by Editor / 21-08-2021 03:36:47pm
சென்னையில் இடியுடன் பலத்த மழை  : சாலைகளில் வெள்ளம்; மரங்கள் சாய்ந்தன

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி இடைவிடாது வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பெய்தது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மழை பெய்தது.சென்னையில் பரவலாக காலை 9 மணி முதல் இடியுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு கனமழையும், அது பின்னர் லேசான மழைக பெய்தது. அண்ணாநகர், கே.கே.நகர், வில்லிவாக்கம், சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், பெரம்பூர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சாலைகளின் ஓரம் உள்ள மரங்கள் ஆங்காங்கே வேறோடு சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சென்று சாய்ந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினார்கள்.

சேத்துப்பட்டில் மரம் விழுந்து ஆட்டோவும், வேன் ஒன்றும் கடுமையாக சேதமடைந்தது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர்ப்படுத்தினர். கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணத்தால் அவதி அடைந்த சென்னை வாசிகள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பெய்தது.

டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இதுபோல் தர்மபுரியில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, திருவள்ளூரில் புழல் செங்குன்றம், அலமாதி, கிருஷ்ணகிரியில் போச்சம்பள்ளி, புலியூர், கிருஷ்ணகிரியில் அரசம்பட்டி, செல்லம்பட்டி பகுதிளிலும், சேலத்தில் ஆத்தூரிலும், புதுச்சேரியில் வில்லியனூர், காலாப்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தின் சுற்றுப்பகுதி களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அதேபோன்று, கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தின் நகர் பகுதிகள், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் கனமழை பெய்தது. பின்னர் அது லேசான மழையாக தொடர்ந்தது.

 

 

Tags :

Share via