ரயில்களில் வளர்ப்பு நாய்கள் கொண்டு செல்ல அனுமதி

by Editor / 02-11-2022 07:46:03pm
ரயில்களில் வளர்ப்பு நாய்கள் கொண்டு செல்ல அனுமதி

ரயில்களில் பயணிகள் தங்கள் செல்லப் பிராணிகளான வளர்ப்பு நாய்களை எடுத்து செல்ல ஏற்கனவே அனுமதி உள்ளது. ரயில்களில் வளர்ப்பு நாய்களைக் கொண்டு செல்ல சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும்போது வளர்ப்பு நாய்களை கூடவே எடுத்துச் செல்லலாம். இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அருகில் உள்ள பயணி ஆட்சேபித்தால், வளர்ப்பு நாய் ரயில் மேலாளர் பெட்டியில் உள்ள கூண்டுக்கு மாற்றப்படும். கூடுதல் கட்டணம் திரும்ப அளிக்கப்பட மாட்டாது.  மற்ற குளிர்சாதன இரண்டடுக்கு, மூன்றடுக்கு படுக்கை , இருக்கை வசதி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை,இருக்கை வசதி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகளில் வளர்ப்பு நாய்களை கூடவே எடுத்து செல்ல முடியாது. ஆனால் கூடையில் சிறிய நாய்க்குட்டிகளை அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் எடுத்துச் செல்லலாம். குளிர்சாதன முதல் வகுப்பு பயண சீட்டு பணிகளைத் தவிர மற்ற பயணிகள் வளர்ப்பு நாய்களை ரயில் மேலாளர் பெட்டியில் உள்ள நாய் கூண்டு மூலமாக கொண்டு செல்ல முடியும். நாய் கூண்டில் பாதுகாப்பாக கொண்டு செல்ல வளர்ப்பு நாய் வாய் கவசத்துடன் முறையாக கழுத்துப்பட்டையில் குறுநீள சங்கிலியுடன் இருக்க வேண்டும். பயணத்தில் நாய்க்கு தேவையான உணவு, தண்ணீர் போன்ற தேவைகளை பயணிகள் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு பயண சீட்டுக்கு ஒரு நாய் மட்டுமே பதிவு செய்ய முடியும். பதிவு செய்ய ரயில் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையத்திற்குவர வேண்டும். வளர்ப்பு நாயை இரயில் கொண்டு செல்ல, அந்த நாய்க்கு எந்த விதமான தொற்று வியாதியும் இல்லை என கால்நடை மருத்துவரிடம் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்கு முன்பாக உடல்நல சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடையில் கொண்டு செல்லப்படும் நாய்க்குட்டிகளுக்கு கூடுதலாக தடுப்பூசி செலுத்திய அட்டையும் வைத்திருக்க வேண்டும். பதிவு செய்யாமல்  நாய்களை ரயிலில் கொண்டு சென்றால் ஆறு மடங்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.

 

Tags :

Share via