அரசு அலுவலக வளாக சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் தாலூகா அலுவலகம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, பி.எஸ்.என்.எல் அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோட்டாட்சியர் அலுவலகம் என மத்திய , மாநில அரசுகள் அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த வளாகத்தில் சாலை சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு பலரும் காயம் அடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சேதமடைந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே அரசு வளாகத்தில் உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தி வருவது மட்டுமின்றி , தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் என பல தரப்பிடம் மனு அளித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை, சேதமடைந்த சாலையினால் தினந்தோறும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதனை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் புகார் மனுக்களை பூக்களுடன் தோரணமாக கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கட்டி, சூடம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :