கள்ளக்குறிச்சியில் சசிகலா,பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது சசிகலா கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். தொடர்ந்து பலியானவர்களது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ள நிலையில் அங்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு எதற்கு நிதி? அவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது தவறானது. நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பது போல உள்ளது. அதை ஒழிக்க வேண்டுமே தவிர நிதி தரக்கூடாது” என கூறினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் தனது எக்ஸ் பதிவில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது என பதிவிட்டுள்ளார்.
Tags : கள்ளக்குறிச்சியில் சசிகலா,பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்