தைரியமான தீர்மானங்களை எடுப்போம் புதிய பழக்கங்கள்

by Editor / 28-06-2022 08:49:22am
 தைரியமான தீர்மானங்களை எடுப்போம் புதிய பழக்கங்கள்

‘நம்மில் பலர் தைரியமான தீர்மானங்களை எடுப்போம். எடுத்துக்காட்டாக, நாளை முதல் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவேன் அல்லது எடை குறைக்கத் தொடங்குவேன்’ என்று நினைப்போம். மனிதர்கள் பழக்கங்களுக்கு அடிமையானவர்கள். ஒரு புதிய பழக்கத்தை ஆரம்பிப்பதுதான் கடினம். பழகிவிட்டால், பின்னர் அதற்கே அடிமையாகிவிடுகிறோம். அதில் பெரும்பாலும் கெட்ட பழக்கங்களாக இருக்கின்றன. நல்ல பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றுவது சற்று கடினமான விஷயம் என்பதால், அதை விடுவதற்கு ஆயிரம் காரணங்களைத் தேடி கண்டுபிடிப்போம்.

நல்ல ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்குவதில் ஏன் கடினமாக இருக்கிறது என்பதற்கு நடத்தை விஞ்ஞானிகள்(Behavioural scientists) கூறும் காரணம். ‘நம்மில் பலர் தைரியமான தீர்மானங்களை எடுப்போம். 

ஆனால்,  அதை நடைமுறைப்படுத்துவதிலும் அதற்குத் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் முயற்சி எடுக்காமல் இருப்பதுமே அந்த பழக்கத்தை செயல்படுத்துவதில் தடைகள் ஏற்படுகின்றன’ என்கின்றனர்.புதிய ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்குவதற்கான சில குறிப்புகளையும் அறிவுறுத்துகிறார்கள்.

புதிய பழக்கத்தை ஏற்கெனவே பின்பற்றி வரும் பழக்கத்துடன் இணையுங்கள். உதாரணமாக, நம்மில் சிலருக்கு எந்த ஒரு செயலையும் காலையில்  தொடங்குவது என்பது வலுவான பழக்கமாக இருக்கும் என்பதால், புதிய பழக்கத்தையும் அதனோடு இணைத்துவிடுவது பின்பற்றுவதற்கு எளிதாக இருக்கும்.

மிகப்பெரிய நடத்தை மாற்றங்களுக்கு தீர்மானம் எடுக்கும்போது, நீடித்து பின்பற்ற வேண்டும் என்பதால் உயர்ந்த உந்துதல் தேவைப்படும்.  முதலில் சிறிதுசிறிதாகத் தொடங்கி, படிப்படியாக அதிகரிக்கும்போது புதிய பழக்கத்தை உருவாக்குவது எளிதாகிவிடும். உதாரணத்துக்கு எடை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. மாதாமாதம், 3 கிலோ வீதம் படிப்படியாக குறைப்பதுதான் ஆரோக்கியமான எடை குறைப்பாக இருக்கும்.

ஐரோப்பிய’ சமூக உளவியல்’ இதழில் வெளியிடப்பட்ட  ஆய்வு ஒன்றில், ஒரு வேலை தன்னியக்கமாக அல்லது ஒரு பழக்கமாக மாற 18 முதல் 254 நாட்கள் வரை ஆகும். அதாவது சராசரியாக 66 நாட்கள் எடுத்துக் கொள்ளும்’  என்பதைக் குறிப்பிடுகிறது. சில பழக்கவழக்கங்களை உருவாக்குவதற்கு, நீண்ட நேரம் எடுக்கும். ஆனால், நாம் அவற்றை தினந்தோறும் செய்யத் தொடங்கிவிட்டால், விரைவில் அவை உருவாகிவிடும்.

உதாரணமாக, ஒருவர் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கடைப்பிடிக்க  முடிவெடுத்துவிட்டால், ‘இன்று விடுமுறை, அதனால் இன்னிக்கு வேண்டாம். நாளை முதல் செய்யலாம்’ என்று சாக்கு, போக்கு சொல்லக்கூடாது. விடுமுறை தினம் என்றாலும், வேலை நாள் என்றாலும் ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து செய்ய வேண்டும் என்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் முன்னால் உள்ள தடைகளை விலக்கும்போது, நம் புதிய பழக்கங்களை பின்பற்றுவது எளிதாகிவிடும். உதாரணத்திற்கு ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில், கிளம்புவதற்கு முன் அதற்கான பொருட்களை மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பல நாட்கள் அதை வீட்டிலேயே மறந்து விட்டுச் சென்றால், அதையே காரணம் சொல்லி, ஜிம்மிற்கு போவதையே நிறுத்திவிடுவோம்.இதற்கு மாற்றாக உபகரணம் தேவைப்படாத அல்லது வீட்டிலேயே செய்யக்கூடிய யோகா, நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற எளிய உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு நீங்களே வெகுமதி கொடுக்கலாம்  குறிப்பிட்ட இலக்கில் பாதியை எட்டிவிட்டாலும் கூட, நீங்களே உங்களுக்கு வெகுமதி கொடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு 10 கிலோ எடை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், 2 கிலோ குறைந்த உடனேயே, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். இது உங்களை மேலும் உற்சாகப்படுத்தும். உங்கள் இலக்கான 10 கிலோ எடை இழப்பை விரைவில் எட்டிவிடுவீர்கள்...

 

Tags :

Share via