நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் தேவை: அமைச்சர் கே.என்.நேரு

by Editor / 04-09-2021 05:15:02pm
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் தேவை: அமைச்சர் கே.என்.நேரு

 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், வணிகர்கள், குடிசைப் பகுதிகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்கள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆகியோருக்கு சிறப்பு முகாம்களின் மூலம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலத்திற்கு 3 கொரோனா தடுப்பூசி முகாம்கள் என 45 தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு வந்தன. இந்த தடுப்பூசி முகாம்கள் தற்பொழுது வார்டிற்கு 1 முகாம் என 200 தடுப்பூசி முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதை மேலும் அதிகரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் 24 மணிநேரம் இயங்கக்கூடிய கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில், ஒரு மண்டலத்திற்கு ஒரு மையம் என 15 மண்டலங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா தடுப்பூசி மையங்கள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-175, வெங்கட்ரத்னம் நகர், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கும் கொரோனா தடுப்பூசி மையத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் முதல் முறையாக 108 ஆம்புலன்சுக்கப் பதிலாக கார்கள் மூலமாக ஒவ்வொரு வீடுகளாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டது.

அதேபோல் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு முகக்கவசம், வெப்பநிலைமானி போன்றவை வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தான் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.2,000 மதிப்புள்ள சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 12 ஆயிரத்து 811 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் 7 ஆயிரத்து 699 பாலூட்டும் தாய்மார்களுக்கும் 14 ஆயிரத்து 626 மாற்றுத்திறனாளிகளுக்கும் 80 வயதைக் கடந்த 3 ஆயிரத்து 305 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தி அதன்மூலம் 3 ஆயிரத்து 583 பேருக்கும் 150 ஆசிரியர்களுக்கும் குடிசைப் பகுதியில் வாழும் பொதுமக்கள் 56 ஆயிரத்து 63 பேருக்கும் என இதுவரை சென்னையில் 44 லட்சத்து 45 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாகப் பேசிய அமைச்சர், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது 6 மாநகராட்சிகளும் 30 க்கும் மேற்பட்ட நகராட்சிகளும் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றில் வார்டு மறுவரையறை செய்யப்பட வேண்டியுள்ளன. இந்தப் பணிகளை முடிப்பதற்கு 100 நாட்கள் தேவைப்படும்.

அதன்பிறகு அவற்றின் குறைபாடுகளைப் பொதுமக்களிடம் இருந்து பெற்று அவற்றை சரிபார்த்து அரசு சார்பாக வெளியிட வேண்டும். இதற்கு மேலும் 1 மாதம் தேவைப்படும். எனவே தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கேட்டிருக்கிறோம். வரும் டிசம்பர் மாத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. 9 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

 

Tags :

Share via